Sunday, 6 March 2011

நான் பொய்யாகிப் போன மர்மம்

அழகிய நாளொன்றில்
உதித்தது அவ்வுறவு
உன் சோகங்கள்
துரத்த வந்த சந்தோஷம்
என்றுரைத்தது உன் உதடு

அனுபவம் தந்த துக்கம்
அழிக்க வந்ததொரு தென்றல்
நீயேதான் என்றபடி
உலகம் கேட்க நான்
சத்தமிட்ட எதிரொலி
மீண்டும் என் காது நோக்கி
வந்து சேர்ந்தது நேற்று

ஒரு மின்னற்பொழுதே காலம்
நம் நட்போ,
அதன் மேலான காதலோ
நிலைத்தது எனினும்
அதில் உண்டான மொட்டுக்கள்
பூக்ககும் நேரம் இது
எனத் தெரியாமல்
அழிக்க நேர்ந்தது ஏனோ?

என்னால் வந்த உறவு
எனக்கே துயரம் தர
முனைந்தது எப்படியோ?
நீ கூறாமல் நின்றாய்
ஒரு ஓரத்தில்
வானை நோக்கியே

வாழ்க்கை ஒரு புதிர்
விடை தெரியாக் கேள்விகள்
அது கேட்கும்
பதில் சொல்ல முயன்றோம் என்றால்
அகப்படுவோம் மீள முடியா வலை
எனத் தெரியாமல் சிக்குண்டேன்
நெல்மணி மணி தேடி வந்த
மாடப்புறா போலே

"என் வாழ்வில் வந்த
பொய் நீ" என்றாய்.
திக்கித்துப் போனேன்
சற்றைக்கெல்லாம்.
உன் சந்தோஷம் நானென
நான் எண்ணி
ஒரு மாயலோகத்தில் திளைத்திருந்தேனா
கடைசிவரை தெரியவில்லை

எங்கோ இருந்து சொல்கிறது
"காத்திருத்தல் தகும்" என
அப்பாவி மனச்சாட்சி.
ஏற்றுக் கொண்டே
ஒரு குன்றின் உச்சியில்,
விளிம்பில் உக்கார்ந்து
கால்களைத் தொங்கவிட்டு
நிலவை முகம் பார்த்து
காத்திருக்கத் தொடங்குகிறேன்

மீளமுடியா வலையில்
கேட்கப்பட்ட கேள்விக்கு
இதுவரை தெரியவில்லை
"நான் பொய்யாகிப் போன மர்மம்"



Friday, 4 March 2011

அது ஒரு பீலிங்!!!

ஒரு காபி ஷாப். கொஞ்சம் பரந்து விரிந்த ஒரு காபி ஷாப். தெருவை நோக்கிய பக்கமாய் கண்ணாடியாலானா திரை. முழுக்க ஏ.சி செய்யப்பட்ட அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடித் திரை அருகில் தெருவை ரசிக்கும் முகமாய் மேஜைகளும் உண்டு. அவ்வாறான ஒரு மேஜை காபி ஷாப்பின் ஒரு கோர்னரில் இருக்கும். ஒரு பக்கம் கண்ணாடித் திரை. அது நைண்டி டிகிரி எடுத்து திரும்ப, வரும் பக்கம் பக்கத்துக் கடைக்கும் காபி ஷாப்புக்கும் இடையேயான பொதுச் சுவர். அந்த மூலை மேஜையில் சுவர்ப் பக்கம் முதுகைக் காட்டி வலப்பக்கம் இருக்கும் கண்ணாடித் திரையூடாக தெருவை ரசித்த படியே காபியை ஸிப் செய்ய தொடங்குகிறேன். அது ஒரு அழகான தெரு. இரு பெருந் தெருக்களை கணக்ட் பண்ணும் ஒரு குறுக்கு வீதி. ஆனாலும் வாகனங்களால் பாவிக்கப்படாத ஒரு தெரு. தெருவின் நடுவில் அழகான பூ மரங்கள். அல்லியம், அந்தூரியம், செர்ரி ப்ளாசம், கார்ன் ப்ளவர், டெய்சி, கேர்பேரா டெய்சி என ஏராளாமான பூ மரங்கள். சற்று சற்று தூரத்தில் நிழலுக்காய் ஒரு சில மரங்கள். தெருவிலே உதிர்ந்து கிடக்கும் பூக்கள், கொஞ்சம் இலைகள்.

அது ஒரு ரம்மியமான மாலை நேரம். பொதுவாகவே மனதில் தோன்றும் ஐந்து மணி. வான் முழுதும் சாம்பல் மேகங்கள் வெயிலை மறைத்துக் கொள்கின்றன. மழை வராது என்று தோன்றினாலும் ஒரு இதமான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஐ.பாட் இல் 'யாரைக் கேட்டு எந்தன் நெஞ்சில் இடப் பக்கம் நீதான் நுழைந்தாயோ'வை சற்று அதிகமான வால்யூமில் வைக்கிறேன். மேஜையை விட்டு எழும்பி ஷாப்ப்பின் கதவைத் தள்ளி வெளியே வருகிறேன். காற்று உடலைத் தொடுகிறது. கைகளை அகல விரிக்கிறேன். கண்களை இறுக மூடி வானத்தை நோக்கி முகத்தை திருப்புகிறேன். அது ஒரு பீலிங். ஒரு அழகிய பீலிங். காதினுள் கேட்கும் அழகிய பாடல். சுற்றி எங்கும் ஒரு அழகிய அட்மாஸ்பியர்.

முகத்தில் சொரிகின்றன பூக்கள். என்னை கடக்கின்ற ஒவ்வொருவரும் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார்கள். அதில் எடை குறைந்து வானத்தில் பறக்கிறேன். மேகம் காலின் கீழ் வருகிறது. எனைத் தூக்கிச் செல்கிறது.
அது ஒரு பீலிங்!!!



Sunday, 6 February 2011

மழை எதிர்ப்புக் கவிதை.

(அண்மையில் கிழக்கிலங்கையில் மழை காரணாமாய் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் நான் வடித்தது)

வறண்டு போன நிலங்களும்
புழுதி படிந்த தெருக்களும்
கனவாகிப் போன காலமாகுமோ.

நின்னில் காரிருள் கலைந்து
மீண்டும் உன்னழகு திரும்புமோ.

கிழக்கே,
சூட்டில் சுகம் கண்ட எமதுடல்கள்,
நடுங்கிச் சுருங்கிப் போயினவே.

செம்மண் பெருமை
சேற்றுச் சகதியாய் காலில் ஒட்டுதே.

வீரம் கொண்டு முறுக்கிய
மீசை நுனியில் பனித்துளி படருதே.

குளிரே வேண்டாமே...
முப்பது டிகிரியில் உன் கருணை அனுப்பேன்...