Friday 17 June 2011

304 - நான்கு பேர்

இது கார்ட்ஸ் விளையாட்டுக்களில் ஒன்றான '304' என்று எங்கள் வட்டாரத்தில் பிரபல்யமான விளையாட்டை ப்ரோமொட் செய்யும் நோக்கில் எழுதப்படுகிறது. நான்கு அல்லது ஆறு பேராக விளையாடப்படும் இந்த விளையாட்டின் நான்கு பேர் விளையாட்டு பற்றி இப்பதிவு...

பாயின்ட் விபரம்:
J = 3
9 = 2
A = 1.1
10 = 1
K = 0.3
Q = 0.2
8 = 0 (பெரியது)
7 = 0 (சிறியது)

பெயர்க்காரணம்: இவ்வாறு 8x4 இனம்=32 கார்ட்டுக்கும் பாயிண்ட்ஸ் கூட்டும் போது 30.4 வரும்.

விளையாட்டு முறை:
1. மேலே பாயிண்ட்ஸ் தரப்பட்ட கார்டுகளை தவிர ஏனையவை விளையாட்டுக்குத் தேவையில்லை. அவற்றை 'கல்லு' என்றழைப்பார்கள். வெல்லும் அணி தோற்கும் அணிக்கு அவற்றை கொடுக்கும். யார் அணி முதலில் கொடுத்து முடிக்கிறதோ அது வென்ற அணி. மேலே பாயிண்ட்ஸ் குறிப்பிடப்பட்ட 8x4=32 கார்ட்ஸ் போக மீதம் இருப்பவை, 52-32=20(ஜோக்கர் இல்லாமல்). இதில் தலா ஒரு அணிக்கு 10 கல்லு. இதை தோற்கும் எதிரணிக்கு கொடுத்து முடிக்கவேண்டும். எதிர் எதிர் பக்கத்தில் இருப்பவர்கள் ஒரே அணி.

2. பிரித்தல்: சாதாரணமாக ஷபிள் பண்ணிவிட்ட பின் இடது பக்கத்தில் இருப்பருக்கு வெட்டக் கொடுக்க வேண்டும். வெட்டுவது என்பது அவர் தரும் கார்ட் டெக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட அமௌன்ட்டை எடுத்து வைப்பது. பின் வலப்பக்கமாக நான்கு நான்காக கொடுக்க வேண்டும்.வலது நான்கு, எதிரிலிருக்கும் எமது அணியைச் சேர்ந்தவருக்கு நான்கு, இடது நான்கு, தனக்கு நான்கு. இதில் நிற்கவும். இப்போது 16 கார்டுகள் கொடுக்கப் பட்டிருக்கும். மீதி 16 தனியாக இருக்கும்.

3. கேட்டல்: இனி பிரித்தவருக்கு வலப்பக்கம் இருக்கும் எதிரணி வீரர் கேட்க ஆரம்பிப்பார். இது எதிரணியை சேலஞ் செய்யும் முறை. ஒரு குறிப்பிட்ட பாயின்ட் எண்ணிக்கையை மற்ற அணி எடுத்துக் காட்ட முடியுமா என்று சேலஞ் விடுக்கும் முறை. ஒருவர் பிரித்தால் வலப்பக்கம் இருப்பவர் கட்டாயம் கேட்டாக வேண்டும். இதில் மினிமம் அமௌன்ட் கேள்வி 'அறுபது ' எனப்படும். அவர் அறுபது எனில் எதிரணியை மினிமம் 14.5 பாயின்ட்கள் எடுத்துக் காட்ட சொல்கிறார். (எழுபதுக்கு 13.5 உம், எண்பதுக்கு 12.5 உம். தொண்ணூறுக்கு 11.5 உம், நூறுக்கு 10.5 உம், நூறு ஐந்துக்கு 10உம், நூறு பத்துக்கு 9.5உம், நூறு பதினைந்துக்கு 9உம், நூறு இருபதுக்கு 8.5உம் கேட்கமுடியும்) இது நான்கு கார்டுகளில் அவருக்கு அமையும் பாயின்ட் பலத்தை வைத்து கேட்டுக்கொள்ளமுடியும். (பாயின்ட் பலம் ஒரே இனத்தில் அமைய வேண்டும்)

4. உடைத்தல்: இது ஏனையவர்கள் கேட்பவருக்கு மேலால் தாங்கள் கேட்பது. முதலில் கேட்பவர் அறுபது கேட்டால் மற்றவர்கள் எழுபதோ, எண்பதோ அதற்குக் கூடவோ தமக்கு அமையும் பாயின்ட் பலத்தை வைத்து கேட்க முடியும்.

5. துருப்பு: யார் கேட்கிறாரோ அவர் துருப்பு மடிக்க வேண்டும். அதாவது, அவர் கேட்டால் ஒரு குறிப்பிட்ட இனத்தை வைத்துக் கேட்டிருப்பார். அவ்வினம் அவ்விளையாட்டின் துருப்பு சீட்டு. அவ்வாறு கேட்டதில் ஒரு சீட்டை கீழே மடித்து வைக்க வேண்டும். இது துருப்பு சீட்டு மடித்தவரை தவிர வேறு யாருக்கும், அவரது அணியைச் சேர்ந்தவருக்கு கூட, என்ன இனத்தில் என்ன சீட்டை மடித்து வைத்திருக்கிறார் என்பது தெரியக் கூடாது. தனக்கு முன்னால் அனைவரது கண்ணிலும் படும்படியாக துருப்பு சீட்டை தலை கீழாக வைத்துக் கொள்ள வேண்டும். துருப்பு சீட்டின் பலம் உங்களுக்கே தெரியும். பொதுவாக இனத்திற்கு இனம் இறக்க வேண்டும். இனம் இல்லாத பட்சத்தில் துருப்பு சீட்டை இனத்தை இறக்கலாம். அப்போது எத்தனை பெரிய பாயின்ட் போட்டிருந்தாலும் துருப்பு சீட்டு போட்டவரின் அணிக்கே அந்த ஆட்டம் செல்லும். அதிலும் ரெண்டு மூன்று துருப்பு சீட்டு இருக்கும் போது பெரிய துருப்பு சீட்டு (பாயின்ட் அதிகமுள்ள துருப்பு சீட்டு) போட்டவரின் அணிக்கு ஆட்டம் செல்லும்.

6: பின்னர் மீதமிருக்கும் 16 சீட்டுக்களையும் நான்கு நான்காக குடுத்து விட வேண்டும்.

ஆட்டம்:
பொதுவாக யார் துருப்பு சீட்டு வைக்கிறாரோ அவரே ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அவன் துருப்பு சீட்டு இனத்தை தவிர்த்து ஏனைய 3 இனத்தில் ஏதாவது ஒரு சீட்டை இறக்கலாம். இதில் முக்கியமான விடயம், ஆட்டத்தை ஆரம்பிப்பவர் போட்ட இனத்தில் பெரிய பாயின்ட் போட்டவருக்கே அந்த ஆட்டம் செல்லும். இதில் ஆட்டத்தை ஆரம்பிப்பவர் போடும் இனம் இல்லாத பட்சத்தில், ஏனையவர்கள் துருப்பு சீட்டை சரியாக கணிக்க வேண்டும். எந்த இனமாக இருக்கும் என்பதை கணித்து அந்த இனச் சீட்டு ஒன்றை தலைகீழாக இறக்க வேண்டும். ஆட்டத்தை ஆரம்பிப்பவரின் இனம் இருந்தால் அந்த இனத்தை போட்டு விடலாம். இவ்வாறு நான்கு பேரும் போட்ட பின்னர் பெரிய பாயின்ட் போட்டவருக்கு (அவரது அணிக்கு) அந்த நான்கு சீட்டுகளும் போகும். இந்த நான்கு சீட்டையும் வெளியே எடுத்து வைத்து விட வேண்டும். இப்போது ஒருவர் துருப்பு சீட்டை கணித்து மடித்துக் கொடுத்திருக்கிறார் என வைப்போம். இவரது சீட்டை ஏனையோருக்கு காட்டாமல், துருப்பு சீட்டை மடித்தவர் மட்டும் எடுத்து பார்க்கலாம். மற்றவர் துருப்பு சீட்டை சரியாக மடித்திருந்தால் மடித்த சீட்டையும் தனது துருப்பு சீட்டையும் ஏனையவர்களுக்கு ஒப்பிட்டு காட்ட வேண்டும். அதோடு பெரிய துருப்பு சீட்டு மடித்தவருக்கு அந்த ஆட்டம் போய் சேரும். இப்போது துருப்பு சீட்டு பப்ளிக் ஆக்கப் பட்டுவிட்டது. இனி துருப்பு சீட்டு கணிக்க தேவை இல்லை. ஆனாலும் பலம் பொருந்திய இனம் துருப்பு சீட்டு இனம்தான். ஒரு ஆட்டத்தில் துருப்பு சீட்டு இல்லாத வேறு ஒரு இனத்தின் J, 9, A இருக்கிறது என்று வைப்போம். நான்காவது நபர் தன்னிடம் அந்த இனம் இல்லாத பட்சத்தில் துருப்பு சீட்டு இனத்தின் 8 ஐ போட்டு அந்த ஆட்டத்தை தனதாக்கிக் கொள்ள முடியும். துருப்பு சீட்டு இனமோ, அல்லது ஒரு ஆட்டத்தில் விளையாடப்படும் இனமோ இல்லாத பட்சத்தில் வேறு ஏதாவது ஒரு இனச் சீட்டை இறக்கலாம். அதில் விளையாடப்படும் இனம் தன் அணிக்குத்தான் வரப் போகிறது என்ற பட்சத்தில் வேறு இனத்தின் பெரிய பாயிண்டையோ தனக்கு வராத பட்சத்தில் வேறு இனத்தின் சிறிய பாயிண்டையோ போட முடியும். இது விளையாடி வழக்கப்படும் நேரங்களில் இயல்பாக நமக்குள் தோன்றும்.இவ்வாறு 8 ஆட்டங்கள் முடிந்த பின்னர் ஒரு ஆட்டம் பூரண நிறைவுறும். இதன் பின்னர் பாயின்ட் எண்ணப்படும். கேட்டவர்களின் அணிக்கு எதிரான அணியினர் தாங்கள் காட்ட வேண்டிய பாயின்ட் எண்ணிக்கையை அடைந்திருப்பின் அவர்களுக்கு வெற்றி. இல்லாத பட்சத்தில் கேட்ட அணிக்கு வெற்றி.

பாயின்ட் விபரம்:
ஒரு அணி கேட்டு, அவர்களே வென்று இருப்பின் அவர்களுக்கு ஒரு பாயின்ட்.
ஒரு அணி கேட்டு, அவர்கள் தொற்றிருப்பின், எதிரணிக்கு ரெண்டு பாயின்ட்.
இவ்வாறு பத்து பாயின்ட் ஐ முதலில் எடுக்கு அணி வெற்றி பெற்ற அணி. :)

இதில் நிறைய விஷயங்கள் விடுபட்டு இருக்கின்றன. இருந்தாலும் ஆரம்ப நிலைக்கு இது போதும் என தோணுது. ஸோ, கொஞ்சம் விளையாடிப் பாருங்க. என்ஜாய் பண்ண முடியுதா இல்லையானு சொல்லுங்க ;)