Sunday 25 August 2013

மனைவியின் காதல்

உன் மடியில் வைத்த தலையில் மலைகளின் பின்னால் எழும்பிடும் சூரியக்கதிர்கள் பட்டே நான் முழித்திட்டேன்
என் நெற்றி மீதே குத்திட்ட வண்ணமாய் பதிருந்த உன் அழகிய கண் பார்வை கண்டே அடைந்தேன் பரவசம்.
என் நெற்றி மீதேறி தலை முடியினூடு சென்றிடும் உன் மெல்லிய விரல்கள் தருமொரு பரவசம்
நாம் அமர்ந்திருக்கிறோம் உச்சி மலையில் சரிவொன்றில் சூரியோதயம் நோக்கிப் பார்த்தபடி இருக்கும் ஒரு பெஞ்சில்
உன் கண் பார்த்து நான் புன்னகைக்கும் தருணத்தில் ரசிக்கிறாய், குனிந்து தருகிறாய் முத்தம்
உன் கழுத்தில் கை போட்டு என் முகம் பக்கம் உன் முகம் கொண்டு வந்தே தருகிறேன் பதில் முத்தம்
கிழவன் கிழவி ஆயும் ஆசை விடலை பாரு நமக்கு என்று சொல்லிக் கன்னம் கிள்ளுகிறாய்
நினைவலைகள் பின்னோக்கி பயணிக்க உன் கரம் பற்றித் தொடங்கிய வாழ்வின் ஆரம்பப்படிகள் நினைத்தே வருகிறது புன்முறுவல்.
எப்போதும் கோர்த்திருந்த கரங்கள், காலை நேரக் காபியுடன் தந்த முத்தம், மாலை நேர மொட்டை மாடி, முதன் முதலாய் ஒன்றாய் பார்த்த சினிமா...
உலகம் முழுதும் சுற்றிட்டோம், சண்டைகள் பல போட்டிட்டோம், எது எப்படியோ நம் கோபங்கள் நிலைத்ததில்லை அரை மணி நேரம்
உன் மெச்சிக் கொள்ளும் அழகில் நான் புதைந்து கிடந்தேன் கபடமில்லா உனதன்பில் நான் மூழ்கிப்போனேன்
இவளவு நாளும் என் துணையாய் நின்றிட்டாய் நீ... என் துன்பங்களில் எடுத்திட்டாய் அதிகளவு பங்கு என் வெற்றிகளில் சிந்திய ஆனந்தக் கண்ணீர்.
உன் மடியிலிருந்து தலைநிமிர்த்தவே என் தோள்களில் நீ சாய்ந்திட்டாய், உன் தலை மீதென் நாடி பதித்த கணத்தில் பிரிந்திட்டது என் உயிர்...
நீ என் வாழ்வில் வந்ததுக்குப் பிரதியுபகாரமாய் வழிந்திருந்தது என் கண்ணிலிருந்து உன் தலை மீது ஒரு சொட்டு ஆனந்தக் கண்ணீர்.