Thursday 15 March 2012

இலக்கணத்தை மீறி...

மழைக்காலத்தில்
ஜன்னலோரக் காப்பி,
பஸ்சில் போகையில்
கையிலொரு ஐஸ்க்ரீம்,
என்றே கணங்களை
ரசிக்க வைத்தாய்...

திறந்து பரந்திட்ட
பசும்புல் வெளியில்
உன் இடக்கை - என்
வலக்கை கோர்த்து,
வானம் பார்த்துக்
கிடந்திட்டோம்...

பறந்து திரிந்த
பட்டாம் பூச்சி பிடித்து
உன் மூக்கில் விட்டு
அதை போட்டோ
எடுத்திட்டோம்...

லெக்சர் பங்க் செய்து
பார்த்த சினிமாவாகட்டும்,
காதல் சீன்கள் போகையில்
நீ விட்ட கூக்குரலாகட்டும்,
பெப்பர்மின்ட் சாப்பிட்டு
குடித்த தண்ணீர் போல்
ஒரு நினைவு...

காலேஜ் டூர் சென்று
நீயும் நானும்
நள்ளிரவில் அடித்த துண்டுபீடி...
முதல் பப்'இலேயே
இருமி இருமி
என் பாட்டியை ஞாபகப்படுத்தியதும்,
நான் உன் இதழிட்ட
முத்தத்தில் நீ அடங்கிப்போனதும்...

வாழ்க்கை இப்படித்தான்
என்றில்லை என்றே
எனக்கும் உணர்த்திட்டாய்
இலக்கணத்தை மீறி
வாழ்ந்து பாத்திடும்
தைரியம் தந்திட்டாய்

ஏற்ற தருணங்களில்
பின் நின்று எனை தள்ளி
தைரியம் தந்திட்டாய்,
பல நேரங்களில்
"நாம்" என்பதன்
அர்த்தம் உணர்த்தினாய்,
சமயங்களில் என் முன் நின்று
ஒரு அரணாய்
காவலும் செய்திட்டாய்

நீ என் வாழ்வில் வந்த
நாள் ஒன்றிலிருந்து
இன்று வரை
செய்திட்ட அனைத்தையும்
ரசனை கலக்கி வைத்தாய்

இப்போது என் கண்முன்
உறங்கிடும் உனை பார்த்திடுகிறேன்
ஆழ்மனதிலிருந்து வெளிப்படும்
காதலில்...
நீயும் நானும்...
நமக்கென ஒருவருக்காய்
காத்திருக்கும் இந்த நேரத்தில்...