Friday, 26 March 2010

அழகிய நோய்

ஒரு பாலிடம் தொடங்கி,
மறு பால் தொற்றும்
இது ஒரு நோய்?

முதல் ஈர்ப்பு எப்படி
என்றறியா, தெரியா கணத்தில்
நம்மையறியாது தொற்றும்

நீ  செய்த ஒரு நன்மை,
அல்லது உன் பிடிவாதம்
என ஆயிரம் காரணம்

காரணத்தில் நல்லவை
அல்லது கெட்டவை
என்று பிரிவில்லை இதற்கு.
தேவை  வெறும் காரணமே.

நீ செய்யும் ஒவ்வொன்றையும்
நின்று ரசிப்பது
இதனொரு பக்க விளைவு

நீ கனவில் வருவதும்
அன்றாடக் கடமைகளில்
குறைபாடு நிகழ்வதும்
அறிகுறி என்கின்றனர்.

அன்பு பரப்பும் இது
தீது விலக்கும்
கலை வளர்க்கும்
அழகுற வைக்கும்...

தீர்வொன்று தேவையே இல்லாமலிருக்கும்
இந்தக் "காதல்" ஒரு
அழகிய நோய்தான்.Thursday, 25 March 2010

தலைக்கு மேல் வந்த வினை

அது ஒரு இதமான இரவு வேளையின் பின் பகுதி. விடியறதுக்கு ஒரு 3 மணி நேரமே இருந்தது. அப்போ மணி 2.30 இருந்திருக்கணும். சுத்தி வர சிட்டுவேஷன் எப்பிடி இருக்குன்னு அறவே தெரியாத லெவல்ல, இன்னும் தொடர்ந்து ஒரு 5 நிமிஷம் குறட்டை விட்டிருந்தேன்னா பக்கத்து வீட்டுக்காரன் என் பெட்ரூம் சுவர்ல தட்டி "யோவ் அந்த மாவு அரைக்கற மிஷினை அர்த்த ராத்ரில ஆன் பண்ணி அப்டி என்னய்யா சரித்திரம் படைக்கறே, அதை அணைச்சுத் தொலையும்" என்று கத்தும் நிலைமைல தூங்கிக்கிட்டு இருந்தேன். 

அப்பிடி ஒரு கவிதையே உருவான இரவு வேளையில் ஏதோ ஒன்று குறைவது போல் லைட்டா ஒரு பீலிங் வரவே கண் முழித்துக் கொண்டது. "இன்னா பீலிங்கு, ஆல் பிகாஸ் ஒப் மீ" னு என்னைப் பார்த்துப் பல் இளித்தது தலைக்கு மேல் இருந்து 'சீலிங் பேன்'. என்ன அதிரி புதிரி பண்ணிச்சோ தெரியல்ல டொட்டோடோய்ங்னு நின்னு விட்டிருந்தது அது. "ஆகா சேம் பிளாட்" என்ற படியே உடம்பு முழுவதும் மொய்த்திருந்தன நுளம்பு/கொசு எனப்படும் மாஸ்கிட்டோஸ். காய்ல், ஆய்ல், நுளம்புவலை மற்றும் இன்ன பிற பாதுகாப்பான்கள் வந்துவிட்டிருந்த போதிலும் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் பிடிக்காத காரணங்களால் நான் அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து வந்தேன். இந்தப் பழக்கமே என் தூக்கத்திற்கு வச்சது ஒரு பெரிய ஆப்பு. 

"சாரி சார், இனிமே எங்க கைல ஒன்னும் இல்ல, எதையுமே ஒரு மூணு மணிநேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்" என்று தலைக்குள் இருந்து சத்தம் போட்டார் மிஸ்டர் பிரெய்ன். இனியும் யோசிச்சு பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், சரி படுத்துத்தான் பார்ப்போமே என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திய போதுதான் ஞாபகம் வந்தது நம்ம ராகவன் முகம்.
 "நண்பா! நான் இருக்கேன்டா, நீ ஒண்ணப் பத்தியும் கவலைப் படாதே, எல்லாத்துக்கும் ஒரு சால்யூஷன் இருக்குப்பா" என்ற படியே காற்றில் கரைந்து போனது அவன் முகம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவன் ஒரு பிரபல யுனிவர்சிட்டி ஒன்றில். இப்போதுதான் இரண்டாமாண்டு. பக்கத்து வீட்டுக்காரன். பால்ய நண்பன். புத்தகப் புழு. த்ரீ இடியட்சில் வரும் சைலன்சர் கணக்காய் ஒரு கேரக்டர். ஆனா கொஞ்சம் நல்லவன் மற்றும் அப்பாவி. ஹெல்ப் மைன்டட் பெர்ஸன்.   

அடுத்த நிமிடம் அவன் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். அவன் தனியாத்தான் இருக்கான் என்று ஆல்ரெடி தெரியும். பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். "ராகவா... ராகவா..." டொக்.. டொக்..டொக்.. கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தான் அவன். "என்ன மச்சான் இந்த நேரத்துல?". விவரித்தேன். நாடியில் கை வைத்து என் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் அவன் என் பிரச்சினையைக் கேட்ட விதம் அவன் எதிர்காலத்தில் ஒரு ப்ராபஸர் ஆக வருவான் போல என்று எண்ணச் செய்தது. "அடச் சே, சப்ப மேட்டர் மாம்ஸ். நீ இரி. ஜஸ்ட் டூ மினிட்ஸ், டூல்ஸ் எடுத்துட்டு வாரேன். தெர்ட்டி மினிட்ஸ்ல செஞ்சிடலாம்".  "ஓகேடா, அப்போ நான் வீட்ல இருக்கேன், நீ வா". "ஷ்யூர் டா" நேரம் மணி 3.


நான் போய் சரியாக ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தான் அவன். ஒரு கையில் தலையணை சைஸ் புத்தகம் ஒன்று, மற்றையதில் ஒரு டூல் பாக்ஸ். ரூமுக்குள் போனோம். சுவிட்ச் போட்டுப் பார்த்தான். கதிரை போட்டு ஏறி 'டெஸ்டர்' வைச்சுப் பார்த்தான். "ஓகே மச்சான் லெட்ஸ் கெட் திஸ் டன். ட்ரான்ஸ்போர்மர்தான் அப்சட். நான் இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணி செய்யறேன். நாளைக்கு நீ புதுசு வாங்கி வா நான் பிக்ஸ் பண்ணித் தாரேன்". "ஓகேடா, இப்போ நான் நிம்மதியா தூங்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு முதல்ல". "டோன்ட் வொர்ரி, நான் இப்படியான மேட்டர்ஸ் பத்தித்தான் படிக்கேன். செஞ்சுடலாம்". "ஓகே"

பேனை கழட்டினான். துடைச்சான். ஒவ்வொரு பார்ட்ஸாய் வெளியில் எடுத்தான். அதன் பெயர்களை சொல்லிக் காட்டினான். புக்கை பார்த்து ஒவ்வொன்றும் எதுக்காக வைக்கப் பட்டிருக்கின்றன, என்ன வேலையைச் செய்கின்றன என்று லெக்சர் எடுத்தான். மறுபடியும் புக்கை ரிஃபர் பண்ணி ட்ரான்ஸ்போர்மர் என்று அவன் சொன்னதை என்னமோ பண்ணினான். மறுபடியும் பழையபடி பிக்ஸ் பண்ணினான். ஒரு வெற்றிகரமான புன்னகை அவன் முகத்தில் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் இருந்தது. "இதுதானா உன் தர்ட்டி மினிட்ஸ்?" மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
"ஓகே மாம்ஸ், இப்போ ட்ரையல் பார்க்கலாம்" வெற்றிக் களிப்பில் சொன்னான் அவன். என்னமோ இவன்தான் பேனையே கண்டுபிடிச்சி இப்போ ட்ரையல் பார்க்கப் போற மாதிரி.
வேற வழின்னு நினைத்துக் கொண்டு சுவிட்சை போட்டேன். 


வழமையாக அன்டி-கிளாக்வைஸ் (anti-clockwise, இடமிருந்து வலம்) ஆக சுற்றும் பேன், கிளாக்-வைஸாக (clockwise, வலமிருந்து இடம்) சுற்ற ஆரம்பித்தது.

"இன்னாடா நடக்குது இங்க?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தேன்.


அவன் அதே கேள்வியுடன் பேனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


பேன் எங்கள் ரெண்டு பேரையும் பார்த்து "விடுகதையா இந்த வாழ்க்கை..." என்று பாடுவது போலவே தோன்றிட்டு...Wednesday, 24 March 2010

இது மற்றுமொரு முத்தமில்லை

என் உதடுகள் இன்னும் காய்ந்து விடவில்லை. அவை காய்வதில் எனக்குத் துளியளவும் விருப்பமில்லை. உன் இதழ் ரேகைகள் உருவாக்கிய குளிர்ச்சி என்னை சிலிர்க்க வைத்தது.

அது வெறும் எச்சில் மட்டுமல்ல, உன் நாணம், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கொஞ்சப் பயம், உன் அன்பு மற்றும் உன் அழகு எனப் பல விஷயங்கள் உணர்ந்தேன்.நீ போன இடங்களுக்கு எல்லாம் நானும் அலைந்து வந்திடவில்லை, இருந்தாலும் உன்னைப் பல இடங்களில் கண்டதாகவே உணர்கிறேன் இந்த முத்தத்தின் பின். வயாகராவை விட மோசமானது ஒரு பெண்ணின் காதல் முத்தம். அதை உன்னிடம் பெற்ற பின் மற்றவர்களின் முத்தம் ஒரு பொருட்டற்றுப் போகிறது.


 உன் உதடு மட்டும் பதித்தாய், எனக்குப் பூர்வ ஜென்மம் வரை 'டைம் மெஷின்' இல் சென்று வந்த உணர்வு. அதுவும் அந்தச் சில செக்கன்களுக்குள்ளாகவே. புயல் மழையில் பல நூறு வருஷம் நின்றதைப் போன்று நனைந்து விட்டிருந்தேன் உள்ளுக்குள்ளாக. நாடி நரம்பிலிருந்த ரத்தம் எல்லாம் உறிஞ்சி எடுத்து விட்ட ஒரு ரத்தக் காட்டேரி நீ. பதிலுக்கு காதல் எனும் அற்புத மருந்து புகுத்திவிட்டாய்.


அதெப்படி, டாக்டர் படிப்பு படிக்காமலே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாய்? அதுவும் வெறும் இதழ்களை பதித்து. இப்போதெல்லாம் இரண்டு நாடித்துடிப்பை உணர்கிறேன் நான். யாராவது செக் பண்ணிவிட்டு "எத்தனை மாசம்" மற்றும் "எப்போ பொம்பளையா மாறினே" என்று சந்தேகத்தோடு கேட்காமல் இருந்தால் சரி. சும்மா சொல்லக் கூடாது, மன்மதக் கலை பெண்களின் உதடுகளில்தான் ஆரம்பிக்கிறது. எனக்கு உன் இதழில்.


நானும் பல பேரிடத்தில் முத்தம் பெற்றிருக்கிறேன். ஆனால் எல்லாமே உன் போல் இனிக்கவில்லை. அது உன் உதடு என்பதாலா அல்லது தந்தது என் உதட்டில் என்பதாலா? அப்படி என்னதான் இருக்கிறதோ அதனுள்...

இப்போதெல்லாம் அம்மாக்கு  சந்தேகம். நான் தண்ணி அடிக்கிறேனோ என்று. உன் முத்தம் தந்த போதை இன்னும் தெளியவில்லை. இதை குணப்படுத்த ஒரு வழி சொல்லேன். என்ன செய்வது அதிலிருந்து தெளியவும் மனமில்லை.


எது எப்படி இருந்தாலும்... நான் எழுதித் தருகிறேன்...


"இது மற்றுமொரு முத்தமில்லை"Sunday, 21 March 2010

நீயும் நானும்

கண் விழித்த போது தெம்பில்லை
கனக்கும் மனதில் உயிரில்லை.
நானும் மற்றுமொரு ஜடம்
முழுக்க மரத்துப் போய்...


குட்மார்னிங் சொல்லிக் குட்டும்
உன் குறும்பான கைகளின்
வளையல் சத்தம் இல்லை.
அறையெங்கும் ஒரு நிசப்தம்...

பெட் காப்பி தரும் கப்
எறும்புகளின் இருப்பிடமாய் இருக்கிறது.
கட்டில் ஓரத்தில் இருந்து
என்னை வெறித்துப் பார்க்கிறது.

வழக்கமாய் கட்டிலில் படரும்
ஜன்னல் வழி சூரிய வெளிச்சம்
உள்ளே வர முடியவில்லை,
ஜன்னல்  திறக்க நாதியில்லை.

களை இழந்த வீட்டில்
கூனிக் குறுகி ஒரு மூலையில்
செய்வதறியாது விக்கித்து நிக்கிறேன்
ஆறுதல் சொல்ல நீ இல்லை.

நேற்றுக் காலை இதெல்லாம் செய்ய
நீ இருந்தாய் என் துணையாக.
பின்னேரமே விபத்தில் இறந்த நீ
என்னையும் கொன்று விட்டாய்.

வீட்டார் எதிர்க்க நண்பர் துணை நிக்க
வாழ்க்கை ஆரம்பித்து முப்பது வருஷம்.
குழந்தையில்லை என்ற குறை போக்க
ஒருவர் மற்றவர் குழந்தையானோம்.

கவலை என்பதை மறக்கவைத்தாய்
அகராதியில் அழித்தெறிந்தாய்
உன்னுடன் வாழப்பழகிய எனக்கு
நீயில்லாமல் இருக்கத் தெரியலியே.

எல்லாமாகி என்னுடன் இருந்தாய்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
போவாய் என்றேன் சொல்ல மறந்தாய்?
நான் செத்திடுவேன் என்று பயமா?


இப்போதும் என்ன?
செத்துத்தான் விட்டேன்.
நிற்கிறேன் அழத் தெரியாமல்
உன் போட்டோவை வெறித்தபடி...லக்கிலூக்கும் ஏழு பேரும்

உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாம், பக்கத்து வீட்டுப் பங்கஜம் மாமி வாய் கூசாம நல்லாவே போய் சொல்லுவா.ஸோ அத நான் நம்பல்ல. அப்புறம் அம்மா சொல்லும் போது லைட்டா டவுட் வந்திச்சு. அப்புறம் இதே விஷயத்தை நண்பன், சினிமா மற்றும் அரசியல்வாதி கூட்டங்களில் என இதர பதர ஏழு சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எல்லாம் கேள்விப்படும்போது உண்மைதானோ என்று மனச்சாட்சி கதவைத் திறந்தது.

ஒரு பக்கம் நீதி நேர்மை அப்பிடின்னுட்டு மனச்சாட்சி டாச்சர் பண்ண, இன்னொரு பக்கம் "லூசாடா உனக்கு, எதையும் ரிஸர்ச் பண்ணாம டோன்ட் கம் டூ எ டிசிஷன்" அப்பிடின்னு பகுத்தறிவு இன் கார்ப்பரேஷன் வித் மூளை சகிதம் கன்னத்தில் அறைய இடையில் உடம்பு சூடாகிக் போய் "போங்கடா நீங்களும் உங்க சண்டையும்" என்று ஜுரம்/காய்ச்சல் என்ற பெயரில் படுத்துக் கொண்டது உடம்பு. பில்லி சூனியம் என்று பங்கஜம் மாமி பதற, ஓவர் எமோஷனலாகி அம்மா அழ கடைசியில் அப்பாவின் உதவியால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஒரு வாரம் 'ஹாஸ்பிட்டல் பியூட்டி குயீன்' நர்ஸ் நர்மதாவின் அழகான கவனிப்பின் பின் வீடு திரும்பினேன்.

மீன்வைல், "மச்சான் உன்னைப் போலவே இருக்கற அந்த மத்த ஏழு பேரும் எப்பிடி, எங்க இருக்கானுங்கன்னு ஒருவாட்டி பாத்துடனும்டா" என்று அடிக்கடி பிரெய்ன் திரி பற்றவைத்துக் கொண்டே இருந்தான். அதற்கு ரைட் ஆப்போஸிட்டா "அவங்க எங்க இருந்தா நமக்கென்ன. எப்படி இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு பிரே பண்ணு போதும்" என்று காதை குடைந்தது மனச்சாட்சி. "அதுவும் சரிதான்" என்று ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டேன்.

பங்கஜம்  மாமியின் அலப்பறைகளும் அம்மாவின் கவலைகளும் நின்று போன சமயத்தில் அறிமுகமானார் லக்கிலூக். காமிக்ஸ், கார்ட்டூன் என்று ஏதோ ஒரு வழியில் வீட்டுக்குள் புகுந்து விடும் அவரது சாமர்த்தியம் கண்டு வியந்தேன். எதிலும் இருக்காத பற்று, வாயில் ஒரு புல், நண்பர்கள் இல்லாத வாழ்க்கை என லைட்டா என்னையே பிரதிபலித்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொள்வோம். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் சில கேள்விகளுக்கு விடை தந்தது.

அந்த ஏழு பேர் மேட்டரில், உருவ ஒற்றுமையில் ஒரு மூணு பேரும், தன்மை ஒற்றுமையில் மீதமும் இருக்கலாம் என்றார். பாஃர் எக்ஸாம்பிள் நீயும் நானும் என்றார். சரிதான் அவர் ஒல்லிப்பிச்சான், நான் அண்டா குண்டா. இருப்பினும் வாழ்க்கை முறையில் ஒற்றுமை இருந்தது. இருவரும் தனிமை விரும்பிகளாக இருந்தோம். நண்பர்கள் ஏமாற்றி இருந்தார்கள். யோசிச்சுப் பார்த்த போது பங்கஜம் மாமிக்கும் அம்மாக்கும் கூட நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அப்பாக்கும் பேஸ்புக்கில் இருந்த பிரேசில் காரருக்கும் ஒரே விதமான பேச்சுத்தன்மை இருந்தது. இதை லக்கிலூக்கிடம் சொல்லி சிரித்துக் கொண்டேன். அவர் டால்டன் சகோதரர்களை பிடிப்பதற்காக 48ம் பக்கத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் சொன்னது காதில் விழுந்ததோ தெரியவில்லை.

மனச்சாட்சி தலையில் கைவைத்து நொந்து கொண்டது, இதோ இப்போ நீங்க "இதெல்லாம் ஒரு பதிவா" என்று  பீஃல் பண்ற மாதிரி. இப்ப பீஃல் பண்ணி என்ன பிரயோசனம், எல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும் என்று நக்கலடித்தது மூளை. லக்கிலூக் கடைசிப் பக்கத்தில் "தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை" என்று பாடி விசில் அடித்தபடி குதிரையில் சென்று கொண்டிருந்தார்...Saturday, 20 March 2010

கவிதையும் காதலும்

கவிதை எழுதுவது அப்படி ஒன்றும்
கம்ப சூத்திரமாய்ப் படவில்லை
உன்னைப்  பார்த்த பின்
என்றெல்லாம் பொய் சொல்லத்தெரியவில்லை.

சுமாரா எழுதிக் கொண்டிருந்ததும்
சப்பென்று போய் விட்டது
என்று பக்கத்து வீட்டுப் பாட்டி
வெற்றிலை போட்டபடி சொன்னார்.


அவருக்கும் கோபம் இப்போது.
அவரை  அழகுராணி என்றெல்லாம்
எழுதிய என் கை இப்போது
உன்னை வர்ணிக்கத் தொடங்கியதில்.

பெண்களுக்கு தமக்குப் பிடித்தவன்
விஷயத்தில் பொறாமை வருவது
வாஸ்தவம்தான் எனினும்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

இப்போது நான் கேட்பதெல்லாம்
எனக்கு ஒரு நல்ல முடிவு.
பிடிக்காவிட்டால்  இப்போதே சொல்லிவிடு,
பாட்டி எனக்காக காத்திருக்கிறாள்.Friday, 19 March 2010

இன்னா மேன் முறைக்கிறே

இன்னா மேன் முறைக்கிறே
என்று சொடக்குப் போட்டாய்.
செய்வதறியாது திகைக்கவில்லை நான்,
முறைப்பதன்றி வேறு வழியில்லை.

நீ போன வழி எங்கும்
என் மோட்டார்பைக் பின்தொடர
என்னை ரெண்டு சகா
காவல் காத்து வர

அது ஒரு பொற்காலம்
அழகிய நிலாக் காலம்.
தண்ணி போட்டு மப்பில்
நட்சத்திரம் எல்லாம் எண்ணியிருக்கிறேன்.

உன் வரலாறு தெரியாது
உன் எதிர்காலம் வளமாக்க
கனவு  கண்டேன்
கோட்டை கட்டினேன்.

நேற்றிரவு வரை
இடிந்து  விழவில்லை அது.
உன்னைப்  பார்க்கும் வரை
அப்படி ஒரு நிலையில்.

அப்படி ஒரு படம்
பார்க்க நினைத்தது தப்புதான்.
மன்னித்து விடு
அல்லது  அடித்தும் விடு.

என் தலை எழுத்து.
அதில் நீயா
நடித்துத் தொலைப்பது.
கோட்டை இடிந்தது.

சரி என்ன செய்வது
அது உன் குற்றமில்லை.
அதை பார்த்ததுதான்
என்  குற்றம்.

ஆனால் உன்னைப் பார்ப்பதை
நிறுத்த முடியவில்லை என்னால்.
அதனால்தான் மறுபடியும்
வந்தேன் உன்னிடம்.

இன்னா மேன் முறைக்கிறே
என்று சொடக்குப் போடுகிறாய் நீ.
மேடம் நான் உங்க ரசிகன்,
எல்லாப் படமும் சூப்பர்,
ஆட்டோகிராப் ப்ளீஸ்.

கையெழுத்திட்ட  நீ,
கூடவே உன் போட்டோ
சேர்த்துத் தருகிறாய்.
வாங்கியபடியே வெளியாகிறேன்.'பேஸ்புக்' இல் தனித்துவமான முறையில் ஆடியோ ஷெயார் பண்ணுதல்

பேஸ்புக்கில் ஷெயார் பண்றது ரொம்பவே ஈசி. ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும் பகுதியில் லின்க் என்பதை தெரிவு செய்து லின்க்கைப் பேஸ்ட் செய்து அட்டாச் பண்ணிவிட்டால் போதும். இது வழமையாக நாம் எல்லோரும் பண்ணும் முறை. நமது நண்பர்கள் நாம் ஷெயார் பண்ணிய லின்க்கை க்ளிக் பண்ணியவுடன் அது உரிய தளத்துக்கு நம்மை பாஃர்வார்ட் பண்ணிவிடும். வீடியோ லின்க் என்றால் பேஸ்புக்கிலேயே வைத்துப்  ப்ளே செய்யும் வசதியும் இருக்கிறது.

இது இப்படி இருக்க ஆடியோ பைஃல்ஸ்களுக்கு பேஸ்புக் ஷெயார் முக்கியத்துவம் தருவதில்லை.பொதுவாக ஆடியோ பைல் இருக்கும் இணையத்தளங்களின் முகவரியைத்தான் ஷெயார் பண்ண வேண்டி இருக்கிறது. நாம் யூடியூப் அல்லது பிற விடியோ பைஃல்கள் பேஸ்புக்கில் ப்ளே ஆவது போல் ஷெயார் பண்ணுவது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு முதலாவதாய் நாம் எமது ஆடியோ பைஃல்லை இன்டர்நெட்டில் ஹோஸ்ட் செய்ய வேண்டும். நான் யூஸ் பண்ணியது 'பைல்டென்' எனும் ஹோஸ்ட். இதில் இலவச கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளவும். நீங்கள் அப்லோட் செய்ய நினைக்கும் ஆடியோ பைஃல்லை இலகுவான ஒரு சொல்லில் பெயரிட்டுக் கொள்ளவும். எக்ஸாம்ப்பிள்... "New.mp3". பின் 'பைல்டென்' இல் அப்லோட் டேப் இற்கு சென்று அப்லோட் செய்யவும். அப்லோட் முடிந்த பின் அது தரும் யூ.ஆர்.எல் ஐ காப்பி செய்து கொள்ளவும். (இது .mp3 என முடிவடையும். இவ்வாறு முடிவடையும் யூ.ஆர்.எல். தரும் வேறு  பைஃல் ஹோஸ்ட்களிலும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்). இனி இந்த யூ.ஆர்.எல் ஐ பேஸ்புக்கில் ஷெயார் செய்ய வேண்டியதுதான் பாக்கி.

ஷெயார் செய்யும் போது வரும் 'ஆர்டிஸ்ட் பெயர்'  மற்றும் 'ஆல்பம் பெயர்' போன்றவற்றை எடிட் செய்து கொள்ளுங்கள்.

ஒரு சிறிய, அழகான பிளேயரில் உங்கள் ஆடியோ ப்ளே ஆவதை  நீங்கள் கேட்டு ரசிக்கலாம் :)Thursday, 18 March 2010

இதுதான் 'காதல்' என்பது...

அண்மையில் ஓர் ஆய்வு
ஏழு வருஷமே நிலைக்குமாம்
ஒன்றின் மீதான பற்று

இது இப்படி இருக்க
நீயும் நானும் எப்படி
இத்தனை வருஷம் உறவானோம்?


ஆதாரங்களாய் கண் முன்னே
நம் பேரக் குழந்தைகள்
நம்மை உரித்து வைத்தவர்களாய்

ஆய்வு எப்படிப் பொய்யாகிற்று?
என்னவென்று அறியா ஒரு பாலம்
உனக்கும் எனக்கும் இடையில்

இதுதான் 'காதல்' என்பது...எப்போதும் போல!

மழை நின்றிட்ட பொழுதில்
வானவில் வண்ணமிட்ட கணத்தில்
பேரரசசி வருவது போல்
படிகளில் இறங்கி வந்தாய்

இதயம் மில்லிசெக்கனில்
துடிக்க மறந்தது.
என் முகத்தினில் படர்ந்திருந்த
நீர்த்துளிகள் காய மறுத்தன.

நீ எதிர் வந்தாய்,
புயல் அடித்தது.
நீ சிரித்தாய்,
மின்னல் வெட்டியது.

நீ கடந்து சென்றாய்,
இடி இடித்தது.
நீ தூரத்தில் மறைந்தாய்,
புயல் மழை ஓய்ந்தது.

போன பின்
எப்போதும் போல
கவிதை எழுதத்
தொடங்கின கைகள்.

கிறுக்கிப்
பிழைத்துக் கசக்கி எறிந்த
கடைசிக் காகிதத்துடன் நிரம்பிக்கொண்டது
குப்பைக் கூடை.Friday, 12 March 2010

கே.எஃப்.சி தேடிய கதை / இங்கி பிங்கி பாங்கி கதை

நேற்று...
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டேன். இரவே மின்னிக்ஸும் வந்து தங்கியிருந்தான். அவனது நீண்ட நாளைய ஆசை "கீக் ரூல்ஸ்" கடையில் ஒரு 'டீ-சேர்ட்' வாங்கிவிடுவது. வாசகம் பொறித்த 'டீ-சேர்ட்' அணிவது நாகரிகம் ஆகிவிட்ட காலத்தில் அவனுக்கு அப்படி ஒரு ஆசை வந்தது ஒன்றும் தப்பில்லை எனினும் அப்பால நடக்கப் போற சம்பவங்கள் தெரியாத படியால் அன்றைய தினத்தை சிரித்த வண்ணமே ஆரம்பித்தேன். காலைக்கடன்கள் முடிந்து வெளியே வந்த போது மின்னிக்ஸும் எழுந்து விட்டிருந்தான். அவன் குளித்து எல்லாம் முடித்து வந்த போது நேரம் ஏழு இருக்கும்.

கடை திறந்திருக்கமாட்டாதபடியால் என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டரில் உலாவத் தொடங்கினோம். அப்புறம் இன்டர்நெட்டை வலம் வந்தோம் ஒருவாறு நேரம் 12 மணி ஆகிவிட்டிருந்தது. ஸாபித்தும் எம்முடன் வந்து இணைந்து கொண்டான். கடை இருப்பது இரண்டு ஊருக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தில் என்றாலும் அந்த ஊர் என்ன கலர் என்பது எங்களுக்கு 'கடல்லேயே' தெரியாது. அந்த ஊருக்கு என்ன நம்பர் பஸ்ஸில் போவது என்பதை நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட நாம், அந்த ஊரில் கே.எஃப்.சி எங்கிருக்கிறது என்பதை கேக்க மறந்தது எவ்வளவு பெரிய மிஸ்டேக் என்பது பட்ட பின்பே தெரிந்தது. காரணம் கே.எஃப்.சி இற்குப் பக்கத்திலேயே அந்தக் கடை இருக்கிறது என்று மின்னிக்ஸ் சொல்லி இருந்தான்.

இதில் நாங்கள் நினைவில் வைக்க மறந்த சில விஷயங்கள்:
1. ஒரு இடத்திற்குப் போவது எப்படி என்று எப்படி சிங்களத்தில் கேட்பது.
2. கடையின் கான்டாக்ட் நம்பர்.
3. நேரம்
4. காலநிலை

மழை கொட்டோ கொட்டென்று கொட்டுவது போல, சரி நேர் எதிர் கோட்டில் காய்ந்து தள்ளியது வெய்யில். ஒருவாறு பஸ்ஸில் தொற்றிக் கொண்டோம். நகர்ந்த பாடில்லை. ஸ்கூல் வேறு விடும் நேரமாதலால் செம ட்ராஃபிக் ஜாம். ஒரு மணித்தியால ஆமை வேகப் பயணத்தின் பின் டெஸ்டிநேஷனை சென்றடைந்தோம். நான் மற்றுமொரு முறை வியர்வைக் குளியல் எடுத்து விட்டிருந்தேன்.

ஒரு மேம்பாலம். சுற்றி "நை நை" என்று கத்திக் கொண்டிருக்கும் சிக்னல் லைட்ஸ். ஒரு விதமான ஸ்ட்ரேன்ஜ் அட்மாஸ்பிஃயரை தோற்றுவித்திருந்தன. அது நான்கு தெருக்கள் வந்து முட்டும் ஒரு சந்தி. நான் 'இங்கி பிங்கி பாங்கி' போட்டு ஒரு தெருவை தெரிவு செய்தேன். "மச்சான், இந்த ரோட்ல முதல் ட்ரை பண்ணலாம் வாங்க" என்றபடி நடக்க ஆரம்பித்தேன். "முதல்ல யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான் ஸாபித். "அது சரி, மொழி தெரிஞ்சா ஏன் கேக்காம, தெரியாததனால தானே இப்பிடி ட்ரை பண்றோம். பேசாம வாங்க" என்றபடி நடந்தேன். மின்னிக்ஸும் எனது கருத்தை ஏற்றுக் கொண்டான். ஸ்கூல் விட்டு அழகான கேள்ஸ் மற்றும் பாய்ஸ் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூல்ல கொடுக்கற  அட்மிஷன் பாஃர்ம்ல முதலாவது கண்டிஷனே "உங்க பொண்ணு அழகானவளா இருக்கணும்னு தான் இருந்திருக்கும் போல" என்றான் மின்னிக்ஸ். சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேவதை மாதிரி ஒருத்தி எங்களைப் பார்த்து சிரித்தபடியே கடந்து சென்றாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்துவிட்டிருந்தோம்.

"போடாங் நீயும் உன் இங்கி பிக்கியும்" என்று நொந்து கொண்ட ஸாபித் மறுபடியும் "யாரையாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான். வேறு வழி இல்லாமல் சரி என்ற நான், யார் போவது என்று கேட்ட போது, எங்களுக்குள் மறுபடியும் இங்கி பிங்கி பாங்கி போட வேண்டிய நிலை வந்தது. போட்ட போது ஆப்பு வந்தது எனக்கு. என்ன செய்வது என்று நொந்த படி நடந்த போது எதிர்ப்பட்டார் ஒரு காலேஜ் வாட்ச்மேன். ஒருவாறு மனசுக்குள் பலமுறை ப்ராக்டிஸ் செய்து கொண்டு அவரிடம் போனேன். உற்றுப் பார்த்தார்,
"கே.எப்.சி?" என்றேன்.
"ஆ?"
 "கே.எப்.சி, கே.எப்.சி..."
 "ஆ?"
எனக்கு  பற்றிக் கொண்டு வந்தது. நன்றாக ஏசி விடத் தோன்றியது. அதற்கும் அவர் மொழி தெரிய வேண்டுமே. தெரிந்திருந்தால் அதை ஏசுவதற்கா யூஸ் பண்ணியிருப்பேன். வழியைத் தெரிந்து கொண்டிருப்போமே. ஒன்றுமே சொல்லாமல் திரும்பி வந்தேன்.

மின்னிக்ஸும் ஸாபித்தும் முறைத்தார்கள். நாங்கள் பார்பிகியூ ரேஞ்சுக்கு நன்றாகவே கறுத்து விட்டிருந்தோம். அப்போதுதான் எனக்கு பெரோஸ் இன் ஞாபகம் வந்தது. மொபைலில் அழைத்தேன், மேட்டரை சொன்னேன். "எனக்கும் அந்த ஏரியா தெரியாது மச்சான்...", நாசமாப் போச்சு "... கொஞ்சம் வெயிட், பக்கத்துல கேட்டு சொல்றேன்". மீன்வைல் நாங்கள் எங்கள் மதிய உணவாக "7 UP" சாப்பிட்டு... ஸாரி, குடித்துக் கொண்டோம். மறுபடியும் அழைத்தேன். "நீ போற திசை சரிதான் மாம்ஸ். அப்டியே போய்க்கிட்டு இருந்தீன்னா ஒரு "புட் சிட்டி" சுப்பர் மார்க்கத் வரும். அதுக்குப் பக்கத்திலேயேதான் 'கே.எப்.சி' இருக்கு". "ஓகே டா, நான் பார்த்துக்கறேன்". மணி 2.30 ஐக் காட்டியது.

நடக்கத் தொடங்கினோம். அது சன நெரிசல் மிகுந்த நகரம். நாங்கள் நடந்த ரோட்டில்சன நெரிசலும், கட்டடங்களும் குறைந்து கொண்டே வருவதாக உள்ளுணர்வு எங்கள் மூணு பேருக்கும் கடுதாசி போட்டிருந்தார். அது டெலிவரி ஆக எடுத்த நேரத்தில் நாங்கள் 2 கிலோ மீட்டர் நடந்து விட்டிருந்தோம். உள்ளுணர்வின் எச்சரிக்கை கிடைக்கப் பெற்றதும் நின்று சுற்று முற்றும் பார்த்த போது பச்சைப் பசேல் என வயல்கள் எதிர்ப்பட்டன. "யார்ட்டயாவது கேட்டுப் பார்ப்போம்டா" மறுபடியும் ஸாபித்.

மின்னிக்ஸ் வானத்தைப் பார்த்த படி நின்றான். பின் எங்களைப் பார்த்தான். "வெயிட், என்கிட்ட அந்த ஷாப் நம்பர் இருக்கு, டயல் பண்ணிக் கேப்போம்" னு அவன் சொன்ன மாதிரி விளங்கவே "என்ன சொன்னாய்? நம்பர் இருக்கா?" என்று கேட்டோம். "ஆமா"ன்னான். "அடப்பாவி, இத முன்னாடியே செஞ்சிருக்கப்படாதா? நாறப் பயலே" பொரிந்து தள்ளினான் ஸாபித். நான் தலைவிதியை நினைத்துக் கொண்டு அருகிலிருந்த கடை ஷோ கேஸில் முகத்தைப் பார்த்த போது நன்றே கறுத்துவிட்டதை உணர்ந்தேன்.

மின்னிக்ஸின் தொலைபேசி அழைப்பு ஆன்ஸர் செய்யப்பட்டது. மேட்டரை சொன்னான். "சாரி சார், நாங்க இப்போ ஸ்டோர் இல்லை. ஆன்லைன் சேல்ஸ் மட்டும்தான் பண்றோம்" என்று வந்திச்சு பதில். செம கடுப்பாயிடிச்சு எங்களுக்கு.

"ஒண்ணும் வேணாம். பேசாம "பெட்டாஹ் (கொழும்பின் ஒரு ஏரியா)" போய் ஏதாவது சாப்பிடுவோம்." என்றான் மின்னிக்ஸ். சரி என்று பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். அது நாங்கள் வந்த பாதை வழியே ஓடத் தொடங்கியது. மேம்பாலம் வந்தது. கடந்து நேராகச் சென்றது. நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தெரிவு செய்த பாதைக்கு நேர் எதிர்ப் பாதை அது. சந்தியிலிருந்து ஒரு ஐம்பது அடி தூரம் சென்றிருப்போம் "கே.எப்.சி" என்றொரு போர்டு எங்களைப் பார்த்து கண்சிமிட்டியது.

ஸாபித்தும், மின்னிக்ஸும் என்னைப் பார்த்து முறைத்தார்கள்.

இனி "இங்கி பிங்கி பாங்கி" போடுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டேன்.Wednesday, 10 March 2010

எனது புதிய "பிஸினஸ் கார்ட்" வலைப்பக்கம்

ஒரு மாதிரியாக உருவாக்கியாகிற்று. இது தற்போதைய ட்ரெண்ட். தமக்கென "பிஸினஸ் கார்ட்/விசிட்டிங் கார்ட்" வைத்திருப்பது போல "பிஸினஸ் கார்ட் வலைமனைகள்" வைத்திருக்கிறார்கள் மக்கள். இதன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்வது எளிதாகிறது. உதாரணமாக இது உலகமயமாக்கல் காலம். இந்த உலகமே ஒரு கிராமமாக கருதப்படுகிறது. பில் கேட்ஸை எதோ நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி அவன் இவன் என்றோ, எங்கோ யாரோ ஆற்றில் வழுக்கி விழுந்ததை நாம் நேரில் இருந்த பார்த்த மாதிரியோ பேசுகின்றோம். ஆக நம் பக்கத்து வீட்டுக்காரன் இணையத்தில் எங்கெல்லாம் இருக்கின்றார் என்பதை அவரே நமக்கு அறிவிப்பது இந்த "பிஸினஸ் கார்ட் வலைமனை" மூலம் சாத்தியம்.

இதன் மூலம் நன்மை???
பெரிசா ஒன்னும் இல்ல. உங்க விசிட்டிங் கார்ட் கொடுக்கிறதால என்ன நன்மையோ அதே. மற்றப்படி ஒருவரது நடவடிக்கைகளை நன்கு பாஃலோ பண்ணி, புறம் பேச ரொம்ப நல்லாவே ஹெல்ப் பண்ணும் :D

எனது வலைமனை.

தங்களது வலைமனைகளையும் இங்கே கமெண்டுங்கள்.Tuesday, 9 March 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 4)

கட்டுக்கதைகள் சொல்வது எப்படி.
உண்மைச் சம்பவங்களை ஒரு கதையாக உருமாற்றம் செய்து தருவதில் பல நன்மைகள் இருக்கின்றன. பஃர் எக்ஸாம்பிள், கதை சொல்லி சில நாட்களின் பின் இது உண்மைச்சம்பவமாம் என்ற தகவல் பரவும் போது, "மாமே நியூஸ் கேட்டியா, அன்னிக்கு கேள்விப்பட்டமே ஒரு மேட்டரு அது மெய்யாலுமே நடந்திருக்குப்பா. நாம அது வெறும் கதைன்னுதானே நெனச்சோம். அப்டி இல்லப்பா. நம்ம ஊட்டாண்ட இருக்கிற யாரோதானாமே அந்த சேகரு. பாத்தியா, எவனையுமே நம்ப முடியறதில்லே" என்று பேசிக் கொள்ளலாம். இது ஒரு விதமான பாப்புலாரிட்டியை கொடுக்கும். மற்றையது நஸ்ருதீன் முல்லாக்கதைகள் போல நல்லவிதமான பாப்புலாரிட்டி.

 தற்போதைய காலங்களில் இந்த இரண்டாம் விதமான (நல்லபடியான) புகழ் வருவது மறித்துவிட்டிருந்தது என்றே சொல்லலாம். ஒரு உண்மைச் சம்பவத்துடன் இப்படியும் நடந்திருந்தால் இன்னும் த்ரில்லிங்கா இருந்திருக்குமே என்று நாம் நினைப்பவற்றை கொஞ்சம் சேர்த்து இரண்டாம் நபருக்கு சொல்லுவதில் தொடங்குகிறது கதையாக்கம். இந்த கதை அப்படியே ஒரு ரவுண்டு கட்டி ஊர் சுற்றி வரும் போது இன்னொரு புதுக் கதையாகி எமக்கே ரிடர்ன் வரும்.

கதைகள் வேகமாகப் பரப்புவதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள் என்றாலும், கதைக்கு நம்பக்கூடிய விதத்தில் புதிய கிளைக் கதைகளை இணைப்பதில் ஆண்களை மிஞ்ச முடியாது. ஒரு சம்பவம் எப்போது கதையாக உருமாறுகிறது என்றால் ஒருவரிடம் அதை சொல்லும் போது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதற்காக நம்ம கிரியேடிவ் ஐடியாவ பயன்படுத்தி எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் சேர்க்கும்போது. இதில் நாம் போய் சொன்னோம் என்று தெரிய வந்தாலும் "நான் அப்பிடித்தாம்பா கேள்விப் பட்டேன்" அல்லது "ஒரு பஃன்கு சொன்னேன்பா" என்று ஜகா வாங்கிக்கலாம்.

சரி, இதில் யாருக்கு என்ன லாபம்??? இது ஐன்ஸ்டீனுக்கும் விடை தெரியா ஒரு கேள்வி. சந்தோஷம்??? கதையினை முதலாவதாய் சொன்னது நாம்தான் என்பதில் உள்ள பெருமை???

இறுகிப்போன மனங்களின் வெளிப்படைத் தன்மையே இது. பக்கத்துக்கு வீட்டுக்காரன் கஷ்டப்படும் போதுமகிழ்வுறும் மனம் அதில் நம் கற்பனை சேர்த்து கதையாக இன்னொருவருக்கு சொல்லும் போது மோட்சமடைகிறது. எல்லாருமே அப்பிடி இல்லைதான். அப்படி இருப்பவர்களை பார்த்து இல்லாதவர்கள் போதனை செய்வதும் இல்லையே? இது ஏன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை பின்பற்றுகிறோமோ?