Friday 21 December 2012

ஏன் இந்த உலகம் டிசம்பர் 21, 2012 இல் அழியாது

இந்த டிசம்பர் 21இல் உலகம் அழியாவிட்டாலும், இது இன்னுமொரு Winter Solstice நாளாக இருக்கும். Winter Solstice என்பது நண்பகல் நேரத்தில் சூரியன் பூமியின் 0 பாகை அகலாங்கிலிருந்து மிகக் குறைந்த தூரத்திலிருக்கும் அகலாங்குக்கு மேலே வருதல். தெளிவான விளக்கத்துக்கு விக்கிப்பீடியா லிங்கை பார்க்கவும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அதன் படி ஒரு வருடத்தின் நான்காவது நிகழ்வு டிசம்பர் 21 அல்லது 22 இல் வழக்கமாக வரும். இந்த முறை டிசம்பர் 21 இல் வருகிறது.

சில கேள்விகள் நாசா விஞ்ஞானிகளிடம் உலக முடிவுகள் பற்றி கேட்கப்பட்டன...

கேள்வி: 2012இல் உலகத்துக்கு ஏதும் ஆபத்து நிகழ இருக்கிறதா? பல இணையத்தளங்கள் டிசம்பர் 2012 இல் உலகம் அழியப்போகிறது என்று சொல்லுகின்றனவே?
பதில்: 2012 இல் உலகம் அழியாது. நமது பூமி 4 பில்லியன் வருடங்களாக நன்றாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது முக்கியமான பல விஞ்ஞானிகளின் கருத்துப்படி 2012 இல் உலகுக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதாக இல்லை.

கேள்வி: 2012இல் உலகம் அழியும் என்ற கருத்துக்கான ஆரம்பம் என்ன?
பதில்: ஆரம்பம் என்றால், சில வருடங்களுக்கு முன்பு,  'நிபிரு' என்ற கோள் பண்டைய 'சுமேரியர்'களால் (தற்போதைய ஈராக்கில் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள்) கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்தக் கோள் பூமியை நோக்கி வருவதாகவும் சொல்லப்பட்டது. சில காலங்களின் பின்னர் இந்த கோள் பூமியை மோதவல்ல திகதி என 2003 ஆம் ஆண்டு மே மாதம் என கணிக்கப்பட்டது. இது பரவலாக,"டூம்ஸ் டே" என்றழைக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட திகதியில் எதுவுமே நடக்காததால், அதற்கு அடுத்த சாத்தியககூறாக டிசம்பர், 2012 சொல்லப்பட்டு, பண்டைய மாயன் கலண்டரின் ஒரு சுற்றுவட்டத்தின் முடிவு நாளாக வரும் 2012 இன் Winter Solstice, அதாவது டிசம்பர் 21 உடன் தொடர்பு படுத்தப்பட்டது. அதிலிருந்து டிசம்பர் 21, 2012 இல் டூம்ஸ்டே வரும் என கணிக்கப்பட்டது.

கேள்வி: 2012இல் மாயன் கலண்டர் முடிவுக்கு வருகிறதா?
பதில்: உங்கள் வீட்டுக் கிச்சனில் உள்ள கலண்டர் டிசம்பர் 31இல் முடிகிறது. அது போல மாயன் கலண்டரும் டிசம்பர் 21, 2012 இல் முடிகிறது. மாயன் கலண்டரை பொறுத்தவரை அது ஒரு மிக நீண்ட கால அளவின் முடிவு, ஆனால் உங்கள் கலண்டர் மீண்டும் ஜனவரி 1இல் தொடங்குவது போல மாயன் கலண்டரின் இன்னுமொரு மிக நீண்ட கால அளவு தொடங்குகிறது.

கேள்வி: டிசம்பர் 23 தொடக்கம் 25 வரை ஒரு Total Blackout பூமியில் ஏற்படும் என நாசா எதிர்வு கூறுகிறதா? [Total Blackout என்பது கோள்கள் மற்றும் சூரியன் தங்கள் அச்சிலிருந்து விலகி புது அச்சுக்கு மாறும் செயற்பாடு. இது நடக்கும் மூன்று நாளும் Total Blackout என அழைக்கப்படும் என்று பரவலாக ஒரு செய்தி அடிபட்டது)
பதில்: நிச்சயமாக இல்லை. நாசாவோ அல்லது வேறு எந்த விஞ்ஞானஆய்வு கூடமோ அப்படி சொல்லவில்லை. இந்தப் பிழையான கருத்துகள் ஒரு வித "பிரபஞ்ச ஒழுங்குபடுத்தல்" செயற்பாடே இந்த Total Blakcoutஐ ஏற்படுத்தும் என்று சொல்கின்றன. அப்படியான ஒழுங்குபடுத்தல் என்ற ஒன்றே இல்லை. (அடுத்த கேள்வியை பார்க்கவும்). இவ்வாறாக வந்த தகவல்களின் சில வெர்ஷன்களில் நாசாவின் அட்மினிஸ்ட்ரேடர் சார்லஸ் போல்டன் இன் ஆபத்து சமயத்துக்கு தயாராக இருத்தல் பற்றி சொன்ன தகவலை மேற்கோளாக குறிப்பிடுகின்றன. இது அரசின் அரசின் திட்டத்துக்கமைய மக்களுக்கு பொதுவான ஆபத்துகள் பற்றி விழிப்பூட்ட சொல்லப்பட்ட ஒரு சாதாரண தகவலாகும். இது ஒரு Blackout பற்றி ஒரு போதுமே சொல்லவில்லை.
இந்த வீடியோவை பார்க்கவும்.

கேள்வி: ஏனைய கோள்கள் பூமியை மோதக்கூடியவாறு அல்லது பாதிக்கக்கூடியவாறு ஒரு ஒழுங்கில் வர முடியுமா?
பதில்: அடுத்த ஒரு சில தசாப்தங்களுக்கு கோள்களின் வரிசைப்படுத்தல் நேரிடாது. மேலும் அவை நேர்கின்ற சமயத்தில் அதனால் பூமியின் மீது ஏற்படக்கூடிய பாதிப்பு புறக்கணிக்கத்தக்கதே. உதாரணத்துக்கு, 1962 நடந்த இவ்வாறான மிகப்பெரிய சம்பவத்தை பாருங்கள். இதே போல 1982 இலும் 2000 இலும் இரண்டு நடந்தேறியது. ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதத்தில் பால் வீதி அண்டவெளியின் மையத்துடன் பூமியும் சூரியனும் நேர் கோட்டுக்கு வருகின்றன ஆனால் அது எந்தவித தீய விளைவுகளும் இல்லாத ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
ஒழுங்கில் அமையும் நிகழ்வு பற்றி மேலதிக தகவல்கள்

கேள்வி: பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் பெரும் அழிவை ஏற்படுத்தப் போவதாகவும் சொல்லப்படும் நிபிரு அல்லது Planet X அல்லது Eris எனப்படும் ஒரு கோளோ அல்லது Brown Dwarfஒ உண்மையிலேயே இருக்கிறதா? (Brown Dwarf என்றால் கோள்கள் என்று அழைக்கப்படுவதற்கு பெரியவை அல்லது நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுவதுக்கு சிறியவையான வான் பொருட்கள்)
பதில்:  நிபிரு மற்றும் பூமியை நோக்கி வரும் ஏனைய கோள்கள் பற்றி வெளியான அனைத்துமே இன்டர்நெட் வதந்திகளே. இவைகள் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவும் இல்லை. நிபிரு மற்றும் Planet X போன்ற கோள்கள் உண்மையா இருந்து 2012 இல் பூமி நோக்கிய இவற்றின் வருகை உண்மையாக இருப்பின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த தசாப்தங்களில் அவற்றின் இடப் பெயர்ச்சி பற்றி அவதானிக்க தொடங்கி இருப்பார்கள். அது மட்டுமல்லாது இற்றைக்கேல்லாம் அவை வெற்றுக்கண்ணுக்கு தென்பட ஆரம்பித்திருக்கும். அவ்வாறான ஒன்று இல்லை என்பதுக்கு இது தெளிவு. Eris இருக்கிறது, ஆனால் அது ஒரு Dwarf கோள்.  இது புளூட்டோவின் தன்மைகளைக் கொண்டிருக்கிறது. இது எமது சூரியக் குடும்பத்தில் எப்போதும் இருக்கும். அதனால் பூமிக்கு கிட்டவாக வரக்கூடிய ஆகக்குறைந்த தூரம் 4 பில்லியன் மைல்கள்.

கேள்வி: Polar Shift Theory (துருவப் பெயர்ச்சித் தத்துவம்) எனப்படுவது என்ன? ஒரு சில நாட்களில் அல்லது மணித்தியாலங்களில் பூமி தன்னைத்தானே 180 பாகை சுழன்று தலை கீழாக மாறிக் கொண்டு விடும் என்பது உண்மையா?
பதில்: பூமியின் அவ்வாறான ஒரு சுற்றுகை சாத்தியமற்றது. கண்டங்கள் மிகச்சிறிய அளவில் நகருகின்றன (உதாரணத்துக்கு அண்டார்ட்டிக்கா கண்டம் நில நடுக் கோட்டின் [0 பாகை அகலாங்கின்] அருகில் பல நூறு மில்லியன் வருஷங்களுக்கு முதல் இருந்தது), ஆனால் இதை வைத்து துருவங்கள் இரண்டும் தமது இடங்களை மாற்றிக் கொள்ளும் என்று சொல்வது தொடர்பில்லாதது. ஆனால் சில இணையத்தளங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக Bait-and-switch (Bait-and-switch முறை என்பது ஒரு ஏமாற்று வழிகளில் ஒன்றாகும். இல்லாத ஒன்றை இருக்கின்றதாக விளம்பரப்படுத்தி, வரும் வாடிக்கையாளர்களுக்கு வேறு ஒரு பொருளை விற்கும் முறை) முறையை கையாண்டு இப்படி ஒரு தகவலை பரப்புகின்றன. அவைகள் பூமியின் சுற்றுகைக்கும் பூமியின் magnetic polarityக்கும் (காந்தங்களில் தென் துருவம் வட துருவத்தை கவர்ந்து இழுக்கும் செயற்பாடு, அதே போல பூமியில் வட துருவம் தென் துருவத்தை கவரும் என்ற கோட்பாடு) தொடர்பு இருப்பதாக சொல்கின்றன, இந்த magnetic polarity குறிப்பிட்ட வழமை என்றில்லாமல்  ஒவ்வொரு 400,000 வருடங்களுக்கு ஒரு முறை சரி நேரெதிராக மாறும் காந்த இழுவிசையுடன் சேர்ந்து மாறுகிறது. எமக்குத் தெரிந்தவரை இந்த சரி நேரெதிராக மாறும் காந்த இழுவிசை பூமியில் வாழும் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் இன்னும் அடுத்து வரும் ஒரு சில மிலேனியங்களுக்கு ஏற்படாது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
காந்த இழுவிசை மாற்றம் பற்றி மேலதிக தகவல்கள் 

கேள்வி: பூமிக்கு 2012 இல் எரிகட்களால் ஏதும் ஆபத்து இருக்கிறதா?
பதில்: பூமி எப்போதும் வால்வெள்ளிகளாலும் சிறுகோள்களாலும் மோதப்படும் நிலையை எதிர்பார்த்தே இருக்கிறது, ஆனாலும், பாரிய அளவிலான மோதல்கள் மிக அரிதாகவே நடந்திருக்கின்றன. கடைசியாக நடந்த மிகப் பெரிய மோதல் 65 மில்லியன் வருடங்களுக்கு முதல்தான் நடந்தது, மேலும் டைனோசர்களின் அழிவுக்கு அது காரணமாகியது. இன்று நாசா விஞ்ஞானிகள் பூமிக்கு மிக அண்மித்தாக இருக்கும் பூமியுடன் மோதவல்ல சிறுகோள்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக Spaceguard Survey எனப்படும் ஒரு கணக்கெடுப்பை செய்கின்றனர். நாங்கள் ஏற்கனவே டைனோசர்களின் அழிவுக்கு காரணமான அளவு பாரிய சிறுகோள்கள் எதுவும் அதில் இல்லை என்ற திடமான முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த எல்லா வேலைகளும் அனைவராலும் பார்க்கக் கூடிய விதத்திலேயே செய்யப்படுகின்றன, மேலும் கண்டுபிடிப்புகள் எமது  NASA Near-Earth Object Program Office இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. எனவே இதில் நீங்கள் 2012 இல் பூமிக்கு அவ்வாறான மோதல்கள் எதுவும் இடம்பெறும் சாத்தியம் இல்லை என்பதை பார்க்கலாம்.

கேள்வி: நாசா விஞ்ஞானிகள் 2012 இல் உலகம் அழியப்போகிறது என்று சொல்லப்படும் விஷயங்கள் பற்றி எவ்வாறு உணர்கிறார்கள்?
பதில்: பாரிய அழிவுகள் அல்லது பெரிய மாற்றங்கள் பற்றி சொல்லப்படும் தகவல்களில், விஞ்ஞானம் எங்கே? ஆதாரங்கள் எங்கே? அப்படி ஒன்றும் இல்லை. அவ்வாறாக சொல்லப்பட்ட கட்டுக்கதைகள் எல்லாம் புத்தகங்களில், திரைப்படங்களில், விவரணப்படங்களில் அல்லது இணையத்திலேயே உருவாக்கப்படுகின்றன, அவ்வாறாக உருவாகும் அந்த விடயத்தை எம்மால் மாற்ற முடியாது. அப்படி 2012இல் உலகம் அழிவதாக சொல்லப்படும் கட்டுக்கதைகள் எதுவும் மிகச் சரியான ஆதாரங்களை காட்டவில்லை.
ஏன் நீங்கள் சுப்பர்நோவா பற்றி பயப்படத் தேவை இல்லை. (நட்சத்திர வெடிப்பு)
Supervolcano பற்றி (சுப்பர் எரிமலைகள் வெடித்தால் சாதாரண எரிமலைகளை விடவும் பல ஆயிரம் மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும்)

கேள்வி: 2012இல் மிகப் பாரிய சூரியப் புயல் மூலம் ஆபத்துகள் ஏதும் இருக்கிறதா?
பதில்: சூரிய நடவடிக்கை ஒரு வழமையான சுழல் செயற்பாடாகும். இது ஒவ்வொரு 11 வருடங்களுக்கும் உச்சத்தை அடைகிறது. ஒவ்வொரு முறை இந்த நடவடிக்கை உச்சத்தை அடையும் போதும் சூரிய நெருப்பு செய்மதித் தொடர்பாடலில் சில சிக்கலை ஏற்படுத்தும். இருந்தாலும் பொறியியலாளர்கள் இந்த சூரியக் காற்றிலிருந்தும் பாதுகாப்பாக இயங்கக் கூடிய இலத்திரனியல் உபகரணங்களை உருவாக்குவதற்கு கற்று வருகிறார்கள். இதைத்தவிர இந்த சூரியக் காற்றால் 2012 இல் பாதிப்பு எதுவும் இல்லை. அடுத்த உச்சகட்டம் அடையும் செயற்பாடு 2012-2014 இல் நிகழலாம் என கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இது ஏற்கனவே வரலாறுகளில்  நிகழ்ந்துவிட்ட ஏனைய உச்ச நடவடிக்கைகள் போல சாதாரணமாகவே இருக்கும்.
சூரியக் காற்றுகள் பற்றிய வீடியோ 
சூரியக்காற்று பற்றி மேலதிக தகவல்கள்

நன்றி: நாசா இணையத்தளம்.



Friday 7 December 2012

கிறுக்கல்கள்


கணங்கள் நத்தைகளாய் நகரும்
காத்திருத்தல் ரணங்களாய் வலிக்கும்
தருணங்கள் தோன்றிடும் நேரங்களில்
ஒலித்திடும் மனது, இது காதெலென...

இனிமேலும் வராது என் வாழ்வில்
நீ பள்ளிக்கூடம் வரா நேரங்கள்
என்றெண்ணுவேன் ஒவ்வோர் இரவும்.

தலை குனிந்து நிலம் பார்த்தே
என் தெரு வழி கடந்திடும்
உன் பாதங்களுக்காய் ஏங்கி
நிற்கும் என் வாசல் படி.

தோழிகள் புடை சூழ
நடந்தே செல்வாய் ஒரு ராணி போல...
காதலால் நீ அழகாய் தோன்றிட்டாயா
இல்லை, உன் அழகால் காதல் வந்ததா...

என் வாழ்வில் நீ இல்லை எனில்
செத்துப்போவேன் என்றொரு பொய்
நான் சொல்லமாட்டேன்
நீ எனக்கு வேண்டும் என்றும் நான்
அடம் பிடிக்க மாட்டேன்

ஆனாலும் நீ சேர்ந்திடும் என் வாழ்க்கை
நீ இல்லாது விடும் நேரங்களை விட்டும்
நிச்சயமாய் சிறப்பாய்த்தான் இருக்கும்.

சும்மா சும்மா கிறுக்குகிறேன்
வழமைக்கு மாறாய் பேப்பர்
குப்பைகள் அதிகமாய் போனதாய்
அம்மா புலம்புகிறார்.

உன் பேரை எழுதிட்டு கவிதை என்கிறேன்
மொக்கை காதல் படங்கள் பார்க்கிறேன்.
ஒரு குடைக்குள் நடந்து நடந்து செல்லும்
காதலர் கண்டு எரிச்சல் கொள்கிறேன்.

ரோஜா வண்ண குடை பிடித்து
ஒரு மாலை நேரம் நீ வருகிறாய்
மழை மெதுவாக தூற்றல் எடுக்கும்
நேரம் பார்த்து உன் குடை மேல்
சொரிகின்றன மஞ்சள் பூக்கள்

சில்லென்ற காற்று எனை ஆக்கிரமிக்க
ஒன்பதாவது மேகத்தில் நின்ற உணர்வு
இதைக் கைகளை விரித்து நீட்டி வைத்து
கண்களை மூடி வானம் பார்த்து உணர்கிறேன்

இன்பம் இன்பம் என மனது சொல்கிறது.
எங்கும் உன் முகமே தெரிகின்றது.
கண்களைத் திறந்தது உனைத் தேட
எத்தனிக்கும் கணத்தில்
எதிரே நிற்கிறாய் நீ...