Wednesday 9 March 2011

அரசியலாகி...

அது ஒரு சாக்கடை என்பர்,
போக வேண்டாம் என்பர்,
இல்லாமல் இருக்க முடியாது
என்றே நினைத்தும் கொள்வர்

பேச்செடுத்தாலே பச்சோந்தியாக்கும்,
உமை இரு வேறு கதை
பேசவைத்தே அழிக்கும்,
சத்தானியத்தின் மறுபிறவி.

அது ஒரு அழகாய்
இருந்தது ஒருக் கால்.
குணம் மாறிப் போனது
ரத்தவெறி மனிதர்களால்.

மாமன் மச்சான்
பங்காளி உறவு,
பெட்டி படுக்கை எடுத்தே
ஊர் விட்டு ஓடிப் போகும்.

அரசியலில் வன்முறை கூடாது
என்றதொரு கூட்டம்.
அரசில்யலை விட வேறென்ன வன்முறை
என்றது மற்றக் கூட்டம்.

அவசர அவசரமாய்
காசு பணம் சேர்க்கும்
ஊடகமாய் மாறிப் போனது,
தான் உருவான நோக்கம்
இழந்து நிர்வாணமாய் நின்றது

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
அன்றே சொன்னான் மூத்தோன்
நம் தலைவன் நம் பிம்பம்
என்று கொண்டே
நம்மை நாம் திருத்தவில்லை

கிணத்துத் தவளைகளாய்
தலைவர்கள் இருந்தால்
நாடு முன்னேறும்
என்றே நினைப்பது மூடம்.

ஒருவரை ஒருவர்
விமர்சனங்கள் தவிர்த்து
ஒன்று கூடியே சமூகம்
முன்னேற்றப் பார்ப்பியா?

அதை விடுத்து உமை
கேள்வி கேட்க வைக்கிறீர்களே
"என்ன கிழித்தீர்கள்
அரசியலாகி?" என...



Sunday 6 March 2011

நான் பொய்யாகிப் போன மர்மம்

அழகிய நாளொன்றில்
உதித்தது அவ்வுறவு
உன் சோகங்கள்
துரத்த வந்த சந்தோஷம்
என்றுரைத்தது உன் உதடு

அனுபவம் தந்த துக்கம்
அழிக்க வந்ததொரு தென்றல்
நீயேதான் என்றபடி
உலகம் கேட்க நான்
சத்தமிட்ட எதிரொலி
மீண்டும் என் காது நோக்கி
வந்து சேர்ந்தது நேற்று

ஒரு மின்னற்பொழுதே காலம்
நம் நட்போ,
அதன் மேலான காதலோ
நிலைத்தது எனினும்
அதில் உண்டான மொட்டுக்கள்
பூக்ககும் நேரம் இது
எனத் தெரியாமல்
அழிக்க நேர்ந்தது ஏனோ?

என்னால் வந்த உறவு
எனக்கே துயரம் தர
முனைந்தது எப்படியோ?
நீ கூறாமல் நின்றாய்
ஒரு ஓரத்தில்
வானை நோக்கியே

வாழ்க்கை ஒரு புதிர்
விடை தெரியாக் கேள்விகள்
அது கேட்கும்
பதில் சொல்ல முயன்றோம் என்றால்
அகப்படுவோம் மீள முடியா வலை
எனத் தெரியாமல் சிக்குண்டேன்
நெல்மணி மணி தேடி வந்த
மாடப்புறா போலே

"என் வாழ்வில் வந்த
பொய் நீ" என்றாய்.
திக்கித்துப் போனேன்
சற்றைக்கெல்லாம்.
உன் சந்தோஷம் நானென
நான் எண்ணி
ஒரு மாயலோகத்தில் திளைத்திருந்தேனா
கடைசிவரை தெரியவில்லை

எங்கோ இருந்து சொல்கிறது
"காத்திருத்தல் தகும்" என
அப்பாவி மனச்சாட்சி.
ஏற்றுக் கொண்டே
ஒரு குன்றின் உச்சியில்,
விளிம்பில் உக்கார்ந்து
கால்களைத் தொங்கவிட்டு
நிலவை முகம் பார்த்து
காத்திருக்கத் தொடங்குகிறேன்

மீளமுடியா வலையில்
கேட்கப்பட்ட கேள்விக்கு
இதுவரை தெரியவில்லை
"நான் பொய்யாகிப் போன மர்மம்"



Friday 4 March 2011

அது ஒரு பீலிங்!!!

ஒரு காபி ஷாப். கொஞ்சம் பரந்து விரிந்த ஒரு காபி ஷாப். தெருவை நோக்கிய பக்கமாய் கண்ணாடியாலானா திரை. முழுக்க ஏ.சி செய்யப்பட்ட அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடித் திரை அருகில் தெருவை ரசிக்கும் முகமாய் மேஜைகளும் உண்டு. அவ்வாறான ஒரு மேஜை காபி ஷாப்பின் ஒரு கோர்னரில் இருக்கும். ஒரு பக்கம் கண்ணாடித் திரை. அது நைண்டி டிகிரி எடுத்து திரும்ப, வரும் பக்கம் பக்கத்துக் கடைக்கும் காபி ஷாப்புக்கும் இடையேயான பொதுச் சுவர். அந்த மூலை மேஜையில் சுவர்ப் பக்கம் முதுகைக் காட்டி வலப்பக்கம் இருக்கும் கண்ணாடித் திரையூடாக தெருவை ரசித்த படியே காபியை ஸிப் செய்ய தொடங்குகிறேன். அது ஒரு அழகான தெரு. இரு பெருந் தெருக்களை கணக்ட் பண்ணும் ஒரு குறுக்கு வீதி. ஆனாலும் வாகனங்களால் பாவிக்கப்படாத ஒரு தெரு. தெருவின் நடுவில் அழகான பூ மரங்கள். அல்லியம், அந்தூரியம், செர்ரி ப்ளாசம், கார்ன் ப்ளவர், டெய்சி, கேர்பேரா டெய்சி என ஏராளாமான பூ மரங்கள். சற்று சற்று தூரத்தில் நிழலுக்காய் ஒரு சில மரங்கள். தெருவிலே உதிர்ந்து கிடக்கும் பூக்கள், கொஞ்சம் இலைகள்.

அது ஒரு ரம்மியமான மாலை நேரம். பொதுவாகவே மனதில் தோன்றும் ஐந்து மணி. வான் முழுதும் சாம்பல் மேகங்கள் வெயிலை மறைத்துக் கொள்கின்றன. மழை வராது என்று தோன்றினாலும் ஒரு இதமான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஐ.பாட் இல் 'யாரைக் கேட்டு எந்தன் நெஞ்சில் இடப் பக்கம் நீதான் நுழைந்தாயோ'வை சற்று அதிகமான வால்யூமில் வைக்கிறேன். மேஜையை விட்டு எழும்பி ஷாப்ப்பின் கதவைத் தள்ளி வெளியே வருகிறேன். காற்று உடலைத் தொடுகிறது. கைகளை அகல விரிக்கிறேன். கண்களை இறுக மூடி வானத்தை நோக்கி முகத்தை திருப்புகிறேன். அது ஒரு பீலிங். ஒரு அழகிய பீலிங். காதினுள் கேட்கும் அழகிய பாடல். சுற்றி எங்கும் ஒரு அழகிய அட்மாஸ்பியர்.

முகத்தில் சொரிகின்றன பூக்கள். என்னை கடக்கின்ற ஒவ்வொருவரும் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார்கள். அதில் எடை குறைந்து வானத்தில் பறக்கிறேன். மேகம் காலின் கீழ் வருகிறது. எனைத் தூக்கிச் செல்கிறது.
அது ஒரு பீலிங்!!!