Tuesday 6 April 2010

அரசியல்வாதியும் தாயம்மாவும்

பின்னாடி  சேர்க்கப்பட்ட முன்குறிப்பு: இது இலங்கையின் "2010 பொதுத் தேர்தலிற்கு" சமர்ப்பணம்.

ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கான வழியில்
வேப்பமர நிழலில் அல்லலுறும் பகலில்
டிஷ்யூ பேப்பர் விற்கிறாள் தாயம்மா...
ராத்திரி வீட்டில் எரிய விளக்கில்லை
வந்தால் போக டாய்லட்டும் இல்லை.

அவள் கண்ணீர்தான் போக்கமுடியாது போயிற்று
மற்றோர் புறம் துடைக்க அவள் விக்கும்
டிஷ்யூ பேப்பரால் எனினும்
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் கணங்களில்
அவளுக்கும் உதவிடும் அது...

இதையெல்லாம் தீர்ப்பேன் என்று
அன்று வந்த அரசியல்வாதி
இன்றும் வந்தார் வாங்க...
வாக்கு இல்லை, டிஷ்யூ பேப்பர்.

ஏர்போர்ட்டிலிருந்து வீடு செல்லும் வழியில்
வாங்கிக் கொள்கிறார் கொஞ்சம்.
இவருக்கு அவளை நினைவில்லை எனினும்
வறுமையின் இருட்டு கண்ணை மறைத்து
இவளுக்கும் ஞாபகசக்தி இழந்ததால் என்னவோ
அவர் தந்த காசை எண்ணத் தொடங்கினாள்,
மறுபடியும் கேட்டதை கொடுத்துவிட்டு...