Friday 7 December 2012

கிறுக்கல்கள்


கணங்கள் நத்தைகளாய் நகரும்
காத்திருத்தல் ரணங்களாய் வலிக்கும்
தருணங்கள் தோன்றிடும் நேரங்களில்
ஒலித்திடும் மனது, இது காதெலென...

இனிமேலும் வராது என் வாழ்வில்
நீ பள்ளிக்கூடம் வரா நேரங்கள்
என்றெண்ணுவேன் ஒவ்வோர் இரவும்.

தலை குனிந்து நிலம் பார்த்தே
என் தெரு வழி கடந்திடும்
உன் பாதங்களுக்காய் ஏங்கி
நிற்கும் என் வாசல் படி.

தோழிகள் புடை சூழ
நடந்தே செல்வாய் ஒரு ராணி போல...
காதலால் நீ அழகாய் தோன்றிட்டாயா
இல்லை, உன் அழகால் காதல் வந்ததா...

என் வாழ்வில் நீ இல்லை எனில்
செத்துப்போவேன் என்றொரு பொய்
நான் சொல்லமாட்டேன்
நீ எனக்கு வேண்டும் என்றும் நான்
அடம் பிடிக்க மாட்டேன்

ஆனாலும் நீ சேர்ந்திடும் என் வாழ்க்கை
நீ இல்லாது விடும் நேரங்களை விட்டும்
நிச்சயமாய் சிறப்பாய்த்தான் இருக்கும்.

சும்மா சும்மா கிறுக்குகிறேன்
வழமைக்கு மாறாய் பேப்பர்
குப்பைகள் அதிகமாய் போனதாய்
அம்மா புலம்புகிறார்.

உன் பேரை எழுதிட்டு கவிதை என்கிறேன்
மொக்கை காதல் படங்கள் பார்க்கிறேன்.
ஒரு குடைக்குள் நடந்து நடந்து செல்லும்
காதலர் கண்டு எரிச்சல் கொள்கிறேன்.

ரோஜா வண்ண குடை பிடித்து
ஒரு மாலை நேரம் நீ வருகிறாய்
மழை மெதுவாக தூற்றல் எடுக்கும்
நேரம் பார்த்து உன் குடை மேல்
சொரிகின்றன மஞ்சள் பூக்கள்

சில்லென்ற காற்று எனை ஆக்கிரமிக்க
ஒன்பதாவது மேகத்தில் நின்ற உணர்வு
இதைக் கைகளை விரித்து நீட்டி வைத்து
கண்களை மூடி வானம் பார்த்து உணர்கிறேன்

இன்பம் இன்பம் என மனது சொல்கிறது.
எங்கும் உன் முகமே தெரிகின்றது.
கண்களைத் திறந்தது உனைத் தேட
எத்தனிக்கும் கணத்தில்
எதிரே நிற்கிறாய் நீ...