Saturday, 25 December 2010

வளவளத்தாரின் கடை

ஊரின் ஒதுக்குப்புறத்திற்கும் மையத்திற்கும் ஒரு நேர்கோடு வரைந்து அதன் மையத்தை தெரிவு செய்தால் எங்கே வருமே அவ்வாறான ஒரு இடத்தில் அமைந்திருக்கும் வளவளத்தாரின் கடை. ஒரு மிகச் சாதாரண 'டீ' கடை. பக்கத்தில் ஊரில் இருந்த ஒரே ஒரு ஆலமரம் நிழல் தரும். அதில் தனது கடை பெஞ்சுகளை போட்டு வைத்திருப்பார். காலையில் முதல் வேலையாய் காக்காய்களுக்கு வடைத்துண்டு போடுவதாலோ என்னவோ பெஞ்சுகளில் காகங்களின் எச்சம் காணப்படுவதில்லை. காலை அஞ்சு மணிக்கெல்லாம் கடை திறந்துவிடும். பள்ளிகளில் தொழுது முடிந்து அங்கே ஒரு டீயுடன் அப்பம் சாப்பிடுவது அனைவரினதும் அன்றாடக் கடமை போலாகியது. அப்பாவுடன் போய் அங்கே ஒரு டீ குடித்துவிட்டு கடற்கரை போய் காலை நனைத்து விட்டு வீடு வருவது என் பால்ய வயதுப் பழக்கம்.

பொடிசுகள் எல்லாரும் மகன், மகள். என் அப்பா வயதுடைய எல்லோரும் தம்பி. அதற்கு மேற்பட்டவர்கள் நானாமார் என வளவளத்தாரிற்கு எக்கச்சக்க உறவினர். வளவளத்தாரின் பெயர்க்காரணம் கேட்டால் அவரே சொல்வார், "ஒண்டுமில்ல மன, நமக்கு சின்ன வயசில இருந்தே கொஞ்சம் கூடுதலா கேள்வி கேக்குற பழக்கம். எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து கேள்வி கேட்டு கேட்டு கொஞ்சம் கூடுதலா பேசத் தொடங்கிட்டன் போல." தன்னை மற்றவர்கள் மேற்குறிப்பிட்ட பட்டப் பெயர் கொண்டு கேலி செய்வது தெரிந்திருந்தும் மனசுக்குள் வைத்திருந்ததில்லை. தன்னை யாரும் பேசி விஞ்ச முடியாது என்று சொல்லிக்கொள்வார். "இதுவும் ஒரு பெரும தானே மன."

இத்தனைக்கும் அவரின் "டீ" ஊற்றும் கைப் பக்குவம் ஊரில் வேறு யாரிடமும் இருந்ததில்லை. அரசியல் பற்றி அவர் அளவளாவும் திறமையை பார்த்து "ஏன் இவர் அரசியல்வாதி ஆகவில்லை" என்று அப்பாவிடம் கேட்டிருக்கின்றேன். "அரசியல்ல இருக்கும் எல்லாரும் திறமையான, அரசியல் பற்றி நன்றாக தெரிஞ்சவங்கதானா?" என்று என்னிடம் பதில் கேட்டார் அப்பா. ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை புது வாழைப்பழக் குலை தொங்கும் கடையின் முன் பக்கத்தில். சிகரட் விற்றதில்லை. கடன் அன்பை முறிக்கும் என்ற போர்ட் இருந்ததில்லை. "பேங்க்ல இருக்குறத விடவும் என்ட கடைலதான் மன கூட அக்கவுன்ட் இருக்கு." இருந்தும் யாரும் அவரை ஏமாற்றியது கிடையாது. வாரம் ஒரு முறை கணக்கு செட்டில் செய்துவிடுவார்கள். சில பேருக்கு இலவச டீயும் கொடுப்பார். "ஒரு நாளைக்கு ஒரு வேள சாப்பாட்டுக்கே கஷ்டப்படுதுகள், காலைல முதல் வேளையாவது சந்தோஷமா சாப்பிடட்டுமே மன."

வளவளத்தார் என்ற பெயர் அவருக்கு கொஞ்சம் கூட சரியில்லை, மற்றவர்கள் அப்படிக் கூப்பிடுவது அவரை அவமதிக்கிற மாதிரி இருக்குப்பா, என்று சொல்லி இருக்கேன். அப்பாவும் அதை ஏற்றுக் கொள்வார். ஆனால், அதுதான் அவரின் அடையாளம். வளவளத்தார் என்றால் ஊர் முழுக்க தெரிந்திருந்தது. தான் வாசிக்கும் ஒற்றைப் பாதையைத் தவிர வேறு எதையும் தெரிந்திராத 'சகீனா' கிழவிக்கு கூட அவரது கடை தெரிந்திருந்தது. தனது பேரனை முதல் தடவையாக ஒரு பொருள் வாங்க வெளியே அனுப்பும் போது "அந்த மெயின் ரோட்டுல இருந்து மூணாவது சந்தில கிழக்குப் பக்கமா போற ரோட்டுல போனா ஒரு ஆல மரம் வரும். அதுக்கு பக்கத்துலதான் நம்மட வளவளத்தார்ட கட இருக்கு. அங்க போயி ஒரு நாலு அப்பம் வாங்கி வாடா" என்று சொல்லி அனுப்புவாள். இந்த "நம்மட" என்ற சொல் மூலம் அனைவரின் வீட்டிலும் ஒரு அங்கத்தவர் ஆனார் வளவளத்தார்.

அனைவரின் வீட்டுத் திருமணங்களிலும் அவரைக் காணலாம். இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வார். காசு பணம் எதிர்பார்ப்பதில்லை. "இதெல்லாம் மனத் திருப்திக்கு மன. என்ட பொண்டாட்டி உசுரோட இருந்து எனக்கும் புள்ள குட்டி இருந்திருந்தா நீங்க எல்லாம் வந்து உதவி செய்ய மாட்டிங்களா. அல்ப்பாய்சுல அவா செத்துப் போவா எண்டு எனக்கு முன்னாடியே தெரியலையே. அத விடு மன. உண்ட கல்யாணத்துக்கும் முதல் 'இன்டேசன்' எனக்குத்தான் சரியா?." 'இன்விடேஷன்' என்பதை சரியாக சொல்லுமளவிற்கு அவருக்கு ஆங்கில அறிவு இல்லை என்றாலும் அவருக்கும் ஒரு சில வெள்ளைக்கார நண்பர்கள் இருந்தார்கள். சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர்களுக்கு இவரின் டீ பிடித்துப் போக, இவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். கொஞ்ச நாளையில், இங்கிலாந்திலிருந்து அந்த போட்டோவும் ஒரு வாட்சும் அவரது கடைக்கு வந்தது. "வெள்ளைக்காரன், வெள்ளக்காரன்தான் மன. சொல்லி வேல இல்ல" என்றார்.

சிறிது நாளையில் மேற்படிப்புக்காக வெளியூர் வந்துவிட்டேன். செமஸ்டர் இறுதிப் பரீட்சை நடந்து கொண்டிருந்த சமயம், தொலைபேசியில் அம்மா சொன்னாள், அவர் மாலை இறந்துவிட்டதாக. சாதாரணமாக தூங்கும்போதே இறந்திருந்ததாக. அவரை அடக்குவதற்காக ஊரே கூடியிருந்ததாக தம்பி சொன்னான். இது எதிர்பார்த்ததே என எண்ணிக்கொண்டேன்.

ஊர் போயிருந்த நேரம், அவர் கடைக்கு சென்று பார்த்தேன். கடைக்கு கதவு இருக்கவில்லை. உள்ளே, ஒரு சிலர் படுத்திருந்தனர். அதே சமயம் அவ்வழியால் வந்த மாமா சொன்னார், "அவரு உயில்ல இப்பிடித்தான் எழுதி இருந்தாராம். கஷ்டப்படுற ஆக்களுக்கு கொஞ்ச நாளைக்கு கடை கதவை திறந்து வைங்க எண்டு"

வளவளத்தார் ஒரு உயர்ந்தவர்தான் என சொல்லிக் கொண்டேன்.