Sunday 26 December 2010

மன்மதன் அம்பு

எனக்கு புரியல. ஏன் எல்லாரும் மன்மதன் அம்பு'வ இந்த காட்டு காட்டறாங்க. கப்பல்ல ஒரு படம் எடுக்கிராங்கன்னா அதுக்காக கப்பலை மையமா வச்சுதான் கதை இருக்கணுமா என்ன. 'வ குவாட்டர் கட்டிங்'ல ஒருத்தர் கேப்பாரே "ஏன்யா எல்லாத்துக்கும் மெஸ்ஸேஜ் தேடிட்டு அலையுறீங்க" அப்படின்னு, அந்த மாதிரி இருக்கு. கமல் ஒரு திறமையான நடிகர். அதுக்காக அவரு பண்ற எல்லாப் படமுமே "ஆர்ட் பிலிம்" மாதிரித்தான் இருக்கணும்னா, பாவம் வயித்துப் பிழைப்புக்கு எங்க போவாரு. நான் அவரது தீவிர ரசிகன். எனக்கு என்னமோ தெரியல கமல் எது பண்ணாலும் பிடிக்குது. படங்கள சொன்னேன். ஏன் கமல் படம்னா "ஆ ஊ"னு ஒரு கூட்டம் கிளம்பிடுதோ தெரியல. எதுக்கெடுத்தாலும் பிரச்சினை. எதைப் பேசினாலும் பிரச்சினை. யார் கண்டது, மன்மதன் அம்பு'ல ஒரு டயலாக் வரும், "தமிழ விடுங்க, அது இனி மெல்லச் சாகும், நாம சாகாம இருந்த சரிதான்"னு சொல்லுற மாதிரி, இதுக்கும் ஏதும் அட்டாக் வாரல்லாம். அப்புறம் ஈழத் தமிழர் கேரக்டர் அவமதிக்கிற மாதிரி இருக்குனு சொல்றாங்க. இதை ஒரு இந்திய தமிழர் அல்லது வடிவேலு செஞ்சிருந்தா விழுது விழுந்து சிரிச்சிருப்போம்ல. இதான்யா நம்ம ப்ராப்ளமே. நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்க வேண்டிய விஷயங்கள சீரியஸ் ஆக பார்க்கிறோம்.

படம் முழுக்க முழுக்க ஐரோப்பாவில் மற்றும் ஒரு க்ரூஸ் கப்பலில். இதுலயும் ஒரு பிரச்சனை. எதுக்காக அவரு அங்க போய் படம் எடுக்கணும். எதுக்காக செலவளிக்கணும். என்ன ப்ராப்ளம்பா இது. கதையின் படி, த்ரிஷா ஒரு நடிகை. சங்கீதா அவங்க ஸ்கூல் ப்ரெண்ட். கவலையை மறக்க த்ரிஷா கொஞ்ச நாள் அவங்க கூட இருந்துட்டு வரலாம்னு அங்க போறாங்க. இந்த ட்ரிப் பத்தி சந்தேகப்படுற அவங்க 'வுட் பீ' மாதவன் அவங்களை கண்காணிக்க மேஜர் கமலை செட செய்து அனுப்புகிறார். ஸோ கமலும் யூரோப் போறாரு. இது யார் குற்றம், அங்க வாழுற சங்கீதா குற்றமா. அல்லது, பார்க்கப் போன த்ரிஷா குற்றமா. அல்லது, கமலை அனுப்பின மாதவன் குற்றமா. அல்லது இப்பிடி கதை எழுதின கமல் குற்றமா. அல்லது இதை ஏற்றுக் கொண்ட ப்ரோடியூசர் குற்றமா. அங்க லொக்கேஷன் செலக்ட் பண்ணின கேமரா மேன் மற்றும் டைரக்டர் குற்றமா? எல்லாத்துக்கும் மேல அனாவசிய செலவு பத்தி ஏன் கமல் படத்த மட்டும் பேசறீங்க. எந்திரனும் சேம் ட்ராக். ஒரு சாங்குக்காக வேண்டி உலகமே போகாத ஒரு இடத்துக்கு நாள் கணக்குல ட்ராவல் பண்ணி எதுக்கு போகணும்? :/

ஓகே, இத விடுவோம். லெட்ஸ் கம் டு தி பாயின்ட். படம் பார்த்தேன். கமலின் அல்ட்ரா யூனிக் காமெடி படங்களில் ஒன்று. வடிவேலுவின் அடி வாங்கும் படலம் மட்டும் ரசிக்கும் கண்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. வார்த்தைகளை மட்டும் வைத்து வரும் காமெடி காட்சிகள் ஏராளம். த்ரிஷாவை விட சங்கீதா கூடுதல் அழகு. மாதவன் ஸ்கோர் பண்ணுகிறார். கமல் தன்னை முன்னிலை படுத்தாமல் மற்றவர்களுக்கு இடம் கொடுத்திருப்பது பெருந்தன்மை. மற்றும், கமல் பாடுவதை தவிர்த்திருக்கலாம். நீல வானம் பாடலில், ரிவர்ஸ் ப்ரேமிங் எனப்படும் யுக்தி அருமை. குடுமபத்துடன் போய் பார்க்கலாம்.

கதை, ரெண்டாவது பந்தியில் சொன்னது. மேலும் நண்பனின் கேன்சரை குணப்படுத்தும் செலவுக்காக செக்கியூரிட்டி ஏஜென்சி வைத்திருக்கும் கமல் இந்த வேலையை மாதவனிடத்தில் ஏற்றுக் கொள்கிறார், பின் தொடர்கிறார். த்ரிஷாவை பற்றி அவங்க நல்லவங்க என்று ஒரு கமல் கட்டத்தில் கமல் செர்டிபிகேட் கொடுக்க, அவரை உடனே திரும்பி வந்துவிடும்படி சொல்கிறார் மாதவன். அதே சமயம் பேசிய பணத்தை கமலுக்கு குடுக்கவும் மறுக்கிறார். காரணம், கமல் த்ரிஷாவை பற்றி மோசமான தகவல் எதையும் துப்பறியவில்லை என்பது. கமலுக்கும் அவசர பணத்தேவை இருப்பதால், த்ரிஷாவைப் பற்றி மோசமாகத் தகவல் குடுத்து மாதவனிடத்தில் காசை வாங்கிக் கொள்கிறார். இந்த நாடகங்கள் எப்படி முடிவுக்கு வந்தன என்பது இரண்டாவது பாதி.

படத்தைப் பார்த்து விட்டு நண்பன் ஒருவன் பேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸ், "கமல் பிகர மாதவன் தூக்கிட்டுப் போனா அது 'அன்பே சிவம்'. மாதவன் பிகர கமல் தூக்கிட்டுப் போனா அது 'மன்மதன் அம்பு".

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போன எனற்கு, ஒரு அருமையான காமெடி படம் பார்த்த திருப்தி.