Sunday 6 March 2011

நான் பொய்யாகிப் போன மர்மம்

அழகிய நாளொன்றில்
உதித்தது அவ்வுறவு
உன் சோகங்கள்
துரத்த வந்த சந்தோஷம்
என்றுரைத்தது உன் உதடு

அனுபவம் தந்த துக்கம்
அழிக்க வந்ததொரு தென்றல்
நீயேதான் என்றபடி
உலகம் கேட்க நான்
சத்தமிட்ட எதிரொலி
மீண்டும் என் காது நோக்கி
வந்து சேர்ந்தது நேற்று

ஒரு மின்னற்பொழுதே காலம்
நம் நட்போ,
அதன் மேலான காதலோ
நிலைத்தது எனினும்
அதில் உண்டான மொட்டுக்கள்
பூக்ககும் நேரம் இது
எனத் தெரியாமல்
அழிக்க நேர்ந்தது ஏனோ?

என்னால் வந்த உறவு
எனக்கே துயரம் தர
முனைந்தது எப்படியோ?
நீ கூறாமல் நின்றாய்
ஒரு ஓரத்தில்
வானை நோக்கியே

வாழ்க்கை ஒரு புதிர்
விடை தெரியாக் கேள்விகள்
அது கேட்கும்
பதில் சொல்ல முயன்றோம் என்றால்
அகப்படுவோம் மீள முடியா வலை
எனத் தெரியாமல் சிக்குண்டேன்
நெல்மணி மணி தேடி வந்த
மாடப்புறா போலே

"என் வாழ்வில் வந்த
பொய் நீ" என்றாய்.
திக்கித்துப் போனேன்
சற்றைக்கெல்லாம்.
உன் சந்தோஷம் நானென
நான் எண்ணி
ஒரு மாயலோகத்தில் திளைத்திருந்தேனா
கடைசிவரை தெரியவில்லை

எங்கோ இருந்து சொல்கிறது
"காத்திருத்தல் தகும்" என
அப்பாவி மனச்சாட்சி.
ஏற்றுக் கொண்டே
ஒரு குன்றின் உச்சியில்,
விளிம்பில் உக்கார்ந்து
கால்களைத் தொங்கவிட்டு
நிலவை முகம் பார்த்து
காத்திருக்கத் தொடங்குகிறேன்

மீளமுடியா வலையில்
கேட்கப்பட்ட கேள்விக்கு
இதுவரை தெரியவில்லை
"நான் பொய்யாகிப் போன மர்மம்"