Thursday, 19 January 2012

சோப்பா / பைப்பா - ஒரு சாதாரணக் குடிமகன் ரூபத்தில் சிறு அலசல்


சமீப காலமாக இணையத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் இந்த சோப்பா'வும் பைப்பா'வும். சோப்பா'வை தமிழில் "இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்" என மொழி பெயர்க்கின்றனர். இது அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் பேசப்பட்ட போது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அனைவரும் இதை ஒரு "காப்பிரைட்" போன்ற ஒரு சட்டமாகவே பார்த்தார்கள். கொஞ்ச நாட்களின் பின்னரான அலசலின் விளைவாகவே இது எல்லாவற்றையும் விட காரசாரமான ஒரு சட்டம் என்பது தெரிய வந்தது. விஷயம் காட்டுத்தீ போல பரவி இப்போது உலகெங்கும் அதை எதிர்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட, "அதெல்லாம் அமெரிக்காக்காரனுங்க அவங்க நாட்டுக்குள்ள ஏதோ சட்டம் உருவாக்கிட்டுப் போறானுங்க... நீ போய் வேலையைப் பார்ப்பியா... அத விட்டுட்டு..." என்று ஒரு துண்டு பீடியை வாயில் போட்டபடியே சொன்னார் அன்சார் நானா.

வெளிப்படையாக பார்த்தால் மேட்டர் "தம்மாத்துண்டு" வாக்கில்தான் தெரிகிறது. அன்சார் நானா சொல்வதைப் போல் நம் வேலையைப் பார்த்துவிட்டு போய்க்கொண்டிருக்கலாம். ஏனெனில் சட்டம் கொண்டுவரப்பட இருப்பது அமெரிக்காவில். இந்த சட்டத்தின் பின்னணியில் இருப்பது எல்லாம் பெரிய பெரிய மல்டி நேஷனல் கம்பனிகள். அவற்றின் பிரதான வியாபாரத்தளம் அமெரிக்காவாக இருக்கிறது. அவற்றை எதிர்க்கும் கூட்டத்தில் பெரும்பான்மையாக இருப்பதும் அமெரிக்க கம்பனிகளே. இப்படி இருக்க இதை கண்டு ஏன் எல்லோரும் "ஸொம்பீ" ஒன்றை பார்த்தது போல் அலறி அடித்து ஓடிப்போய் கையில் ஒரு பெரிய ஷாட்கண்னை எடுத்துக்கொள்ள வேண்டும். விளக்கம் இருக்கிறது.

"காப்பிரைய்ட்" பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் ஒரு எழுத்தாளராக இருக்கலாம். அல்லது புதிதாக எதையாவது கண்டு பிடித்து இருக்கலாம். அப்போது உங்கள் ஆக்கத்தை அல்லது படைப்பை நீங்கள் உங்கள் பெயரில் காப்பிரைட் செய்து வைத்துக்கொள்ளலாம். 

எதற்காக செய்ய வேண்டும்?
அண்மையில் எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. நான் ஒரு விடயத்தைப் பற்றி எனது 'ப்ளாக்'இல் ஒரு சிறிய விமர்சனத்தை எழுதி இருந்தேன். அப்போதைய திகதிக்கு, உலகிலேயே முதன் முதலாய் அந்த விடயம் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது நான்தான். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்ற பிரச்சனையை பின்னால் வைத்துக்கொள்ளலாம். நான்தான் அதை முதலில் வெளியிட்டேன் என்பதை ஆதார பூர்வமாக என்னால் நிரூபிக்கக் கூட முடியும். அது அவ்வாறு இருக்க, மறு நாள் எனது விமர்சனத்தை வரி கூட மாற்றாமல் காப்பி செய்து, ஏதோ அவர்கள்தான் அதை முதலவாதாக வெளியிடுவதாய் "உலகத்திலேயே முதன் முதலாக..." என்ற வர்ணனை வேறு சேர்த்து போட்டுவிட்டார்கள். இபோதுதான் "காப்பிரைட்" தனது விளையாட்டைக் காட்டுகிறது. பொதுவாக ஒரு படைப்பை "காப்பிரைட்" இற்கு என இருக்கும் அரச அலுவலகத்தில் போய் நாம் உரிமை செய்துகொள்ள முடியும். இதுவே நான் இணையத்தில் மட்டுமே எழுதித் தொலைவதால் "க்ரியேட்டிவ் கொமன்ஸ்" எனும் இணைய உரிமையை உபயோகித்து வந்தேன். இதில் எனது ப்ளாக்'ஐ ரெஜிஸ்ட்டர் செய்து உரிமை பெற்றிட்டேன். அதனால் இதில் எழுதப்படும் அனைத்து படைப்புகளுக்கும் நான் தனித்தனியே உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை. அதில் வழங்கப்படும் உரிமத்தின் ஒரு வகை, என் அனுமதியுடன் மாத்திரம் எனது படைப்புகளை மாற்றம் ஏதும் செய்யாமல் அப்படியே பிரசுரிக்க முடியும். இதுவே என் 'ப்ளாக்' இற்கு எடுக்கப்பட்டிருந்தது. எனவே எனது படைப்புகள் அனைத்திற்கும் இந்த பதிப்புரிமை வந்துவிடும். இப்போது இந்த பதிப்புரிமையை பயன்படுத்தி என்னால் எனது ஆக்கத்தை காப்பி செய்த அனைவரையும் கோர்ட்டிற்கு இழுக்க முடியும். 
இதுவே காப்பிரைட் இல்லாத பட்சத்தில் எம்மால் சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாமல் போகும். அதே சமயம் எம்மிடம் இருந்து காப்பி செய்த இன்னொரு நபர் எமக்கு முன்னால் அதை காப்பிரைட் செய்து கொண்டால் விஷயம் இன்னும் மோசமாக போய்விடும். சட்ட ரீதியாக அது அவரது ஆக்கமாக போய் விடும். அப்புறம் காப்பி செய்தவரிடம் போய் நாம் நீதி, தர்மம் எல்லாம் பேசி கன்வின்ஸ் பண்ணித்தான் ஏதாவது பண்ண வேண்டி இருக்கும்.  

ஒரு படைப்பாளியின் பாயின்ட் ஒப் வியூ இல் தனது படைப்பை தன் அனுமதி பெறாது வேறு ஒருவர் தனது அவரது படைப்பாகவோ அல்லது ஒரிஜினல் ஆக்கம் இன்னாருடையதுதான் என்று குறிப்பிடாது சும்மா வெளியிடுவது ரொம்ப வேதனை தரக் கூடிய ஒரு விஷயம். சினிமா கதைகள் பற்றிய பிரச்சனைகள் கோர்ட்டுக்கு போவதை அடிக்கடி வாசித்திருப்பீர்கள். இவ்வாறு தன் ஒரிஜினல் ஆக்கம் சிம்பிளாக காப்பி செய்யப்படுவதை தடுக்கத்தான் சோப்பா / பைப்பா வந்து தொலைத்தது.

சோப்பா / பைப்பா என்ன செய்ய முடியும்?
இதில் ஆழமான உட்கட்டமைப்புகள் இருக்கின்றன. அது அந்த நாட்டு லோயர்களுக்கே தெளிவாக இன்னும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறதால் ஒரு சிம்பிள் பாயின்ட் ஒப் வியூ இல் பார்க்கலாம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் கொஞ்சம் நல்லா இருக்கட்டுமேன்னு பின்னணியில் ஒரு பாடல் ஒன்றை ஓட விடுகிறீர்கள். இதை இன்டர்நெட்டில் யூடியூப்பிலோ அல்லது பேஸ்புக்கிலோ பகிர்கிரீர்கள். இப்போது ஆரம்பிக்கிறது சோப்பா'வின் ஆப்பு. அதை நீங்கள் அவர்களிடம் காசு கொடுத்து வாங்கியதற்கான ஆதாரம் இல்லாத பட்சத்தில் உங்கள் வீடியோ தூக்கப்படும். அதை ஷெயார் பண்ண அனுமதி அளித்ததற்காக யூடியூப் மற்றும் பேஸ்புக் இற்கும் சில நேரங்களில் வரும் ஆப்பு. அவை முற்றாக தடை செய்யப்படும் அளவிற்கு கூட போகலாம். கூகிள் தனது சேர்ச் ரிசல்ட்ஸ்'இல் உங்கள் வீடியோவை காட்டினால் கூகிள் சந்திக்கு இழுக்கப்படும். 

இதெல்லாம், ஒரு படைப்பாளியின் சுயத்தை காக்கிறோம் என்ற போர்வையில் செய்ய இருக்கிறது இந்த சோப்பா. இந்த சட்டம் வந்தால் ஒரு படைப்பாளியின் படைப்பை அவரது அனுமதியில்லாமல் போட்டால் அதற்கு வழக்கோ வாயிதாவோ கிடையாது. டைரக்ட்'ஆக ஆப்புதான். உங்கள் தளம் முடக்கப்படும். அதுவே நீங்கள் ஒரு "ப்ளாக்" வைத்திருந்து அது வேர்ட்பிரஸ்ஸில் அல்லது பிளாக்கர்'இல் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால் உங்கள் தளத்தை அனுமதித்ததற்காக அவற்றிற்கும் விழும் செம அடி. 
டி.என்.எஸ் தடை என்ற ஒரு புது பிரச்சனை. ஒரு கட்டத்தில் இலங்கை அரசு தனக்கு எதிரான தளங்களை நாட்டிற்குள் பார்க்கவிடாமல் செய்தது உங்களுக்கு தெரியும். இது போன்ற ஒரு தடை குறிப்பிட்ட தளத்தின் மேல் விழும். இதுவே வேர்ட்பிரஸ் இல் இருக்கும் ஒரு தளத்திற்கு விழும் போது அதில் ஏற்றப்பட்டிருக்கும் இன்னும் பிற தளங்களுக்கும் சேர்ந்து பாதிப்பை உண்டாக்கும். சனி போனால் தனியே போகாது என்பதாகி விடும் கதை.  டி.என்.எஸ் தடை எல்லாருக்கும் புரிய சாத்தியமில்லையால் அதை ஆழமாக அலசத் தேவை இல்லை.

இன்னொரு சிம்பிள் எக்ஸாம்பிள். ஒரு நடிகையின் போட்டோவை ஒருவர் அவரது ப்ராபைல் பிக்சர்'ஆக பேஸ்புக்'இல் போடுகிறார் என வைப்போம். இது ஒரு பெரிய போட்டோக்ராபி அல்லது விளம்பர நிறுவனத்தின் காப்பிரைட் செய்யப்பட்ட புகைப்படமாக இருக்கும் பட்சத்தில் அந்த நபரின் கணக்கு முடக்கப்படலாம். பேஸ்புக் இதை அனுமதித்ததுக்காக டி.என்.எஸ் தடை செய்யப்படலாம். இதெல்லாம் கண நேரத்தில் நடக்கலாம். 

ஆன்லைன் இல் படம் பார்ப்பதற்கும் பாட்டுக் கேட்பதற்கும் டவுன்லோட் செய்வதற்கும் காசு செலுத்த வேண்டி இருக்கும். ஒரு பாட்டுக்கு 2$ ஒரு படத்திற்கு மற்றும் ப்ரோக்ராம் இற்கு 50$ எனக் கட்டணம் இருக்கலாம்.  டொரன்ட் தளங்கள் முற்றாக தடை செய்யப்படும்.

இந்த சட்டம் ஏற்பட இருப்பது என்னவோ அமெரிக்காவில்தான் என்றாலும் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் இது மறைமுகமாய் மற்றும் நேரடியாய் பாதிக்கப்போவதை மேல் சொன்னவற்றில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும். சின்னொரு தப்புக்கு இவ்ளோ பெரிய தண்டனையா என்று கேட்கும் அளவிற்கு இது பாதிப்பை கொண்டு வரும். 

இப்போது அன்சார் நானாவின் விஷயத்திற்கு வருவோம். அவர் சொன்னது போல் இதை நாம் எதிர்ப்பதால் பிரயோஜனம் (நேரடியாக) இல்லைதான். இருப்பினும் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பரில் அமெரிக்க சட்டவாக்க கழகத்தில் நடந்த முதலாவது வாசிப்பின் பின் அதன் தொடர்ச்சி பெப்ரவரிக்கு ஒத்திப் போடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுதும் இதற்கு எதிர்ப்பு இருப்பதை காட்டுவதன் மூலம் இது சட்டமாதலை தடுக்கலாம் என்றே அனைவரும் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். அமெரிக்க மக்கள் மட்டுமே இந்த சட்டத்தை நேரடியாக செயலிழக்க எதுவாக இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். தங்களது பிரதிநிதியான செனட்டர் இற்கு விரிவான பெட்டிஷன்களை அந்நாட்டு மக்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்த போதும் சோப்பா'இற்கு செனட் சபையில் பெரும்பான்மையான ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில முக்கியமான, படங்கள் தயாரிக்கும் கம்பனிகள் இவர்களுக்கு சூட்கேஸ் அனுப்பி இருப்பதாலேயே இந்த ஆதரவு என்கிறது ஒரு வட்டாரம். 

எதிர்ப்பு நடவடிக்கை!
ஆரம்பத்தில் இந்த சட்ட அமுலாக்கத்தை மிகத் தீவிராமாக ஆதரித்தது "கோ டாடி" எனும் ஒரு டொமைன் ரெஜிஸ்ட்றார் கம்பனி. (அதாவது, உங்கள் பெயரில் ஒரு தளத்தை தொடக்க வேண்டுமானால் நீங்கள் "உங்கள் பெயர் . கொம்" என்ற இணைய முகவரியை இது போன்ற ஒரு டொமைன் ரெஜிஸ்ட்றார் இடமே வாங்க வேண்டும்.) இதனால் இதில் கணக்கு வைத்திருந்த அநேகமான மக்கள் இதிலிருந்து விலகி வேறு ஒரு இடத்தில் சேர்ந்து கொண்டார்கள். இதில் இந்தக் கம்பனிக்கு ஒரு மாதத்தில் பல மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டது. இது பாரிய அளவில் நடந்த முதலாவது எதிர்ப்பு நடவடிக்கை. 
இன்னொரு கட்டமாக நேற்று விக்கிபீடியா அதன் ஆங்கில பக்கத்தை முடக்கியது. சற்று நேரத்தின் முன் வெளியாகி இருக்கும் கணக்கின் படி நேற்றைய நாளிலே விக்கிப்பீடியாவை பார்க்க முயற்சித்த எண்ணிக்கை ஏனைய நாட்களைக் காட்டிலும் மிக அதிகமாம். சற்று யோசித்துப் பார்க்கலாம், விக்கிபீடியாவும் கூகிள் உம் இல்லாத இணையத்தை கற்பனை செய்ய முடியுமா? 

எதிர்ப்பின் விளைவு!
சில மணித்தியாலங்களின் முன் பைப்பா சட்டத்தை உருவாக்குவதில் பங்களித்த மற்றுமொரு முக்கியமான நபர்அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். ஏனையோரையும் இதற்கான ஆதரவை கைவிட சொல்லி அவர் கேட்டிருப்பது கூடுதல் நலம்.

இது இவ்வாறு இருக்க, சோப்பா'வின் இறுதி முடிவு பெப்ரவரியில் நடக்க இருக்கும் அடுத்த கட்ட வாசிப்பின் பின்னர்தான் தெரிய வரும். அதுவரை இருக்கும் நேரத்தில் எம்மால் முடியுமான விதங்களில் எமது எதிர்ப்பை நாம் வெளிப்படுத்துவோம்.