Sunday, 16 August 2009

கில்லி திருட்டு VCD முதல் ஷோ

ரொம்ப நாளா எழுதணும்னே நினச்சிட்டு இருந்த ஒரு விஷயம்... என் வாழ்கைல மறக்க முடியாத வேடிக்கையான அனுபவம் :)

காலம்: கில்லி படம் ரிலீஸ் ஆகி சரியாக எட்டு நாட்கள்
நேரம்: இரவு ஒன்பது மணி

வீட்ல சும்மா உக்காந்து கொப்பிய புரட்டிகிட்டிருந்தேன். "உனக்கு ஒரு கோல்" கிச்சன்லேர்ந்து அம்மா கூப்பிட்டாங்க.
போய் ரிசீவரை எடுத்து காதில் வைத்து "ஹலோ", சொன்னதுதான் தாமதம். எதிர் முனையில் ஒரு சந்தோஷமான குரல் ஒலிக்க தொடங்கியது.
"ஹலோ மச்சான் நான்தாண்டா .................................., கில்லி படம் VCD வந்திடுச்சுடா கைய கால புடிச்சி முதல் காப்பி எடுத்துகிட்டு வந்துட்டேன். நானே இன்னும் பார்கல்ல, வீட்ல இன்னிக்கு பார்க்கற நெலம இல்ல, உனக்கு வேணும்னா இரவைக்கு பார்த்துட்டு தா" என்றான் அவன்.

ஆஹா இது என்னடா பழம் நழுவி பால்ல விழுந்த கதையா இருக்கேன்னு செம சந்தோசம் எனக்கு. விஜய் படம், அதுவும் முதல் காப்பி அந்தகாலத்துல இதெல்லாம் ஒரு சினிமா ரசிகனின் வாழ்கை லட்சியம். அப்போ விஜய்யும் கொஞ்சம் நல்லாவே நடிச்சிட்டிருந்தார். அப்போது அவர் தெரிவு செய்த கதைகள் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியானவை.

"ஒகே மச்சான் எண்ணி பத்து நிமிஷம், உன் வீட்ல நான் நிப்பேன்" னு போன்னை வைத்தேன்.

"அம்மா, கொஞ்சம் வெளியில் போய்ட்டு வாரேன்".

எனக்கு வீட்ல எப்ப வேணாலும் வெளில போற அனுமதி இருந்திச்சு.

முதல் கட்ட நடவடிக்கையாக நான் போனது, என் இன்னொரு நண்பன் வீட்டுக்கு. அவன்கிட்டாதான் அப்போ ரொம்ப வேகமா சைக்கிள் மிதிக்க கூடிய கால்கள் இருந்தன. நண்பர்களுக்கிடையிலான நட்புறவு சைக்கிள் ஓட்டப் போட்டிகள் டியூஷன் முடிந்த கையோடு அவரவர் வீடு செல்லும் பாதைகள் பிரியும் மெயின் சந்தி வரை நடக்கும். அதில் அனைத்திலும் அவன்தான் வெல்லுவான். நான் எப்போதும் பின் புறமிருந்து முதலாவதாய் செல்வேன். எனவே கொஞ்சம் அவசரமான வேலைகளுக்கு என் சைக்கிளில் நான் அவனை பிக் அப் செய்து கொள்வது வழக்கம்.

கதவை தட்டினேன். வந்தது அவன்தான். "என்னடா?" ன்னான். மேட்டரை சொன்னேன். அவன் விஜய்யின் தீவிர ரசிகன். எங்க ஊர் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஆகும் அளவுக்கு. எனக்கு பயம் என்னடான்னா முதல் காப்பிய தான் பாக்கனும்னு ஒத்த கால்ல நின்னான்னா ஒண்ணும் பண்ணமுடியாது. குடுத்துத்தான் ஆகணும். நான் அவனுக்கு பண்ணவேண்டிய செய் நன்றிகள் அந்த அளவுக்கு எகிறிப் போய் இருந்தன.

கொஞ்ச நேரம் யோசிச்சான். "ஓகே மச்சான் போறது ஒண்ணும் பிரச்சின இல்ல. இன்னிக்கு வீட்ல கொஞ்சம் விசேஷம், மாமாக்கு திருமண நிச்சயதார்த்தம். அதால இன்னிக்கு வீட்ல படம் பார்க்கிற நிலம இல்லியேடா" ன்னான். ஆஹா, உனக்கு அப்பிடி அப்பிடி வேற ஒரு ஐடியா இருக்கா. முதல் காப்பி நான் பார்க்கணும்டா... மனசுக்குள்ள சொல்லிகிட்டேன்.

"சரி, போய் முதல் எடுத்து வருவம், நிற்கு நீ பார்த்துட்டு காலைல எனக்கு தா" என்றான், ஏதோ அவன்ட சொந்த vcd மாதிரி.
"ஓகேடா சீக்கிரம் ஏறு அவசரமா போகணும்" என்றேன்.
"கொஞ்சம் பொறு, என்கிட்டே வேற ஒரு சாமான் இருக்கு" னு உள்ள போனவன் கைல ஒரு கீயுடன் வந்தான்.

"என்னடா மாப்ளே இது ?" னு கேட்டு முடிக்கல அவன் கை காட்டிய திசையில் ஜம்முனு ஒற்றைக்காலில் சாய்ந்த படி இருந்தது ஒரு 'சலி' / 'சாலி' மொட்டோர்பைக்.

ஆஹா, இது அதுல்ல கணக்கா நான் போய் பின்னாடி உக்கார அவன் உதைத்த எட்டாவது உதையில் மரித்தெழுந்தது அந்த பைக். கிட்டத்தட்ட பக்கவாதம் வராத குறை அதுக்கு. ஹெட்லைட் கிடையவே கிடையாது. ஹேண்டில் ஈசான மூலைப்பக்கம் ஒரு 30 பாகையில் திருப்பி வைத்தால்தான் அது நேராக செல்லும். செயின் இன் சத்தம் யோகி பி ரீமிக்ஸ் பண்ணின பாட்டு கணக்கா இருந்தது.
போதாக்குறைக்கு அன்னிக்கு மழை வேறு. சற்று தூறிக் கொண்டிருந்தது. தவாளிப்புகளே இல்லாமல் வழுக்கைத் தலை ரேஞ்சுக்கு இருந்த அதன் டயர்கள் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும்னு என்னால் கணிக்க முடியவில்லை...

மெயின் வீதி வந்தவுடன் அவன் அவனது புத்தியை காட்டத்தொடங்கினான். பைக் சற்று வேகமெடுப்பதை உணர்ந்தேன். "டேய், மெதுவா போடா".

"நான் வேகத்தின் காதலன்" என்று கத்திய படியே ஆக்சிலேட்டரை முறுக்கினான் அவன். "எங்கயாவது முட்டிகிட்டு அப்புறம் யோசிக்காம கொஞ்சம் மெதுவாவே போவம்டா, மழை வேறு பெய்யுது" சொல்லி முடிச்சேனான்னு ஞாபகம் இல்ல. போன வேகத்தில் முட்டியது ரோட் கிராஸ் பண்ணின ஒரு லுமாலா உடன்.

லுமாலா சரிந்து ரோட் இல் விழுந்தார். எங்களுக்கு லைசன்ஸ் எடுக்கவே மூணு வருஷம் இருக்குன்னு அப்போதுதான் ஞாபகம் வந்திச்சு. "மவனே எதுவும் யோசிக்காதே முறுக்கின வேகத்திலேயே புடி"ன்னேன்.
மனசுக்குள்ளே "அர்ச்சுனரு வில்லு" பாட்டு விசுவல் உடன் ஓட ஆரம்பித்தது.

விஜய்யை நினச்சுகிட்டே முருக்கியிருக்கணும் அவன், வண்டி செம ஸ்பீட் எடுத்தது. அதன் அதியுயர் வேகமே நாப்பதுதான் என்று கொஞ்ச நேரத்திலேயே எங்களுக்கு விளங்க ஆரம்பித்தது. பின்னால் திரும்பி பார்த்த போது சுமார் ஒரு 30 செக்கனுக்கு பின் ஸ்பொட் இல் இருந்து ஒரு ஸ்பிளென்டர் ஒன்று சீறிக் கிளம்புவது என் கண்ணுக்கு விளங்கியது. "ஆகா முத்துப்பாண்டி துரத்த ஆரம்பிச்சிட்டான்டா, எங்கயாவது உள் ரோடா பார்த்து வண்டிய திருப்பு" கத்தினேன் நான்.

வந்த முதலாவது திருப்பத்தில் திருப்பினான் அவன், டென்ஷன் இல் ரோட் இல் இருந்த கல்லை கவனிக்க் தவறிவிட்டான் அவன். முன் டயர் பட்டதும்தான் தாமதம் கிளம்பிக்கொண்டது. மிக முக்கியமான காரணம் நான் கொஞ்சம் ஓவர் வெயிட் என்பது. இதுவரை காலமும் அதை மறுத்து வந்த நான், இக்கனத்தில்தான் மற்றவர்கள் சொன்னது நிஜம் என்பதை உணர்ந்தேன். இப்போ உணர்ந்து என்னாத்த பண்றது...

இனி வண்டி அவன் கட்டுப்பாட்டை இழந்தது இருவருக்கும் புரிந்தது. பின் டயரில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் வண்டியின் வேகத்தை குறைக்க இருவருக்குமே தோணவில்லை. நான் இடுப்பை இடமும் வலமுமாக ஆட்டி வண்டியை திசை திருப்ப தொடங்கினேன். இந்த கபலீகரத்தில் வண்டியின் ரெயர் வியூ கண்ணாடிகளில் ஒன்று கழன்று விழுந்து விட்டது. மனசுக்குள் இன்னமும் அர்ச்சுனரு வில்லு பாட்டு மெட்டு மறந்து போய் சிக்கின cd கணக்காய் ஓடிக் கொண்டிருந்தது.

கொஞ்ச தூரம் போயிருப்போம் ஒரு பள்ளம் நிறைய வெள்ளம், இறங்கிதான் அதை கடக்கணும். இன்னொரு கல்லில் உதவியால் முன் டயரும் நிலத்தை தொட, வண்டியை வேகப்படுத்தினான் அவன். பள்ளத்தில் இறங்கியதுதான் தாமதம், கத்திய படியே உயிரை விட்டது அது. நேரம் பார்த்து ஸ்ப்ளென்டொர் எங்க இடத்தை அடைந்தது. நாங்கள் அவர்களை கவனிக்காத மாதிரி வண்டிக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டோம். பயனில்லை. வந்த இருவரில் ஒருவன் வந்து என் சேர்ட் கொலரை பிடித்தான், "அடிபட்டா என்ன ஏதுன்னு இறங்கி கேக்கமாட்டியா? அங்க அவன் சாக கிடக்கிறான். அவன் சைக்கிள் வேற உடஞ்சி போச்சு, ஒழுங்கு மரியாதியா காசு 2000 எடு" என்றான். எங்களுக்கு விளங்கியது, இவர்கள் எதுக்காக வந்திருக்கிறார்கள் என்று.

"அண்ணா, இப்ப கைல ஒண்டும் இல்ல. அட்ரசை நோட் பண்ணிகங்க, வீட்டுக்கு வாங்க தாரம்" எண்டான் அவன். அவர்களும் ஒத்துக்கொள்ள நாங்கள் இருந்த இடத்தில் ஒருந்து அவ்வூரில் சரி நேர எதிர் திசையில் இருந்த இரு வீட்டு விலாசங்கள் குடுக்கப்பட்டன. சற்று நேரத்துக்கான உரையாடல்களின் பின் அவர்கள் செல்ல நாங்கள் வண்டியை உருட்டிய படி வீடு வந்து சேர்ந்தோம்.

கையில் சில சிராய்ப்புகள் இருந்தன. ரேடியோவை ஆன் செய்தேன், அர்ச்சுனரு வில்லு பாட்டு ஓடிக் கொண்டிருந்தது...