Saturday, 3 December 2011

பேனா நுனி வழிந்திடும் ரத்தம்...


'அன்-ப்ரடிக்டபிள்' என எல்லாராலும் வர்ணிக்கப்பட்டவர் செபஸ்டியன். பொதுவாவே அன்-ப்ரடிக்டபிள் என்ற பெயர் அதிகம் கோபம் வருபவர்களுக்கும் திடீர் என ஒரு விஷயத்தை செய்பவர்களுக்கும் சொல்லப்படுவதுண்டு, இவருக்கும் அதே. புரட்சிகரமான எழுத்தாளர் எல்லாம் கிடையாது. ஆனாலும் அவருக்கு மக்களிடம் ஒரு பயம் இருந்தது. ஊர்ப் பிரச்னையை 'நாடோடி' என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்கு கொண்டு வந்திட்டார். அதை தீர்ப்பதற்கான ஆக்ஷன்களை ஒரு சிலர்தான் எடுத்திட்டார்கள். இருந்தாலும் இவரது முயற்சிகேனும் இவருக்கு சுற்றும் ஒரு நல்ல பெயர் இருக்கவில்லை. வயது ஐம்பதின் இறுதிகளில் இருந்திருக்கவேண்டும் நான் அவரை முதலில் கண்ட போது. ஒரு ரிடயர்ட் கிளார்க். மனைவி ஒரு பத்து வருஷத்துக்கு முதல் இறந்துவிட்டதாக நண்பன் சொன்னான். 'காஸ் ஒப் டெத்' இயற்கை மரணம்தான். பிள்ளைகள் இல்லை. பின்னேரங்களில் நண்பனின் வீட்டுக்கு கேரம் விளையாட விசிட் அடிக்கும் போது அவரைக் காண்பேன். அவனது வீடு அமர்ந்திருந்த தெருவிலேயே இவரது வீடும் இருந்தது. ஒரு சின்ன முற்றம். வாசலின் ஓரம் முழுதும் சுவரை அண்டி செவ்வரத்தை மரங்கள். நான்கு முயல்கள் முற்றத்தில் பாய்ந்து கொண்டிருக்கும்.

வீட்டில் ஆறு மணிக்கெல்லாம் ஆஜெர் ஆகிவிட வேண்டும் என்று அப்பா ஆர்டர் போட்டிருந்தார். நான்கு மணிக்கு ஒரு தரமும் ஐந்தே முக்காலுக்கு இன்னொரு தரமுமாக ஒருவர் முகத்தை ஒருவர் வெறித்துப் பார்த்துக்கொண்டே ஒண்ணரை வருடமாக க்ராஸ் பண்ணிக் கொண்டிருந்தோம். ஒரு நாள், ப்ரெண்ட் வீடு செல்லும் போது செபஸ்டியன் வீட்டு வாசல்களில் இருந்த முயல்களை காணவில்லை. அவர் வழக்கம் போல வீட்டு வாசலில் இருந்து தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். முயல்களின் மீதான ஒரு விருப்பம் அவற்றுக்கு என்ன ஆனதோ என்று அறிய என்னை சீண்டிக் கொண்டிருந்தன.
"ரொம்ப கண்டிப்பான மனுஷன். சும்மா சும்மா கோபம் வரும்"
"எப்ப பாத்தாலும் எரிஞ்சு விழுவாரு"
"சிரிக்கவே மாட்டாரு"
ஊராரின் பேச்சுகள் காதில் எதிரொலித்தன.

வேறு வழி இல்லை. போய்க் கேட்டு விடலாம்.
"அங்கிள்"
பார்த்தார். ஒரு ரியாக்ஷனும் இல்லை.
"அங்கிள், உங்களைத்தான்."
"என்ன"
"இல்ல, உங்க யார்ட்ல கொஞ்ச ரப்பிட்ஸ் ஓடிட்டு இருந்திச்சே. அதெல்லாம் எங்க?"
எழும்பிக் கொண்டார். உள்ளே வா என்று செய்கை காட்டிய படியே வீட்டுக்குள் சென்றார்.

வர்ணிக்கும் அளவிற்குப் பெரிய கலை நயத்தில் எல்லாம் அவ்வீடு கட்டப்பட்டு இருக்கவில்லை. சாதாரண ஒட்டு வீடுதான். உள்ளே போனேன். சோபாவில் இருக்குமாறு சொல்லிவிட்டு ஒரு ரூமுக்குள் போய் விட்டார். கொஞ்ச நேரத்தில் வெளிய வந்தவரின் கையில் ஒரு கோப்பையும் பேனையும் இருந்தது. நடுத்தாளை கிழித்து கொப்பியின் மேல் வைத்து பேனாவையும் அதையும் என்னிடம் தந்தார். அவரை கேள்விகளுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"யாரோ திருடனுங்க அதை எடித்திட்டு போய்டாங்க. இதை பத்தி நான் பேப்பருக்கு எழுதப் போறேன்"
மனதில் எதோ பாரம் தோன்றியது.
"போலீஸ்ல சொல்லலாமே!"
"எடுத்துப்பாங்களா கம்ப்ளைண்டா? சின்ன புள்ளததனமா இருக்குன்னு நெனப்பாங்களே."
"என்ன பண்றது அங்கிள்"
கொஞ்சம் யோசித்தார். "வா போலாம்."

வெளியே வந்தோம். அவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. கேரியல் இல்லாத ஒரு சைக்கிள். முன்னால் ஏற்றிக் கொண்டார். புழுதி படரும் தெருக்களில் மெதுவாக புறப்பட்டது சைக்கிள்.
முதல் முதலாக போலிஸ் ஸ்டேஷனில் நுழைந்தேன். பிரமிப்பாக இருந்தது. அதுவும் நாலு முயலுக்காக. பெரிதாக பழக்கமில்லாத ஒருவருடன். அவர் சொன்னபடியே சிரித்தார்கள். புதுசாக வாங்கிக் கொள்ள சொன்னார்கள். அவருடன் பழக வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். எல்லாத்தையும் மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. போக சொன்னார்கள். வெளியே வந்தோம். சைக்கிளை தள்ளிக் கொண்டார்.

"நடந்து போலாமா?" கேட்டார்.
"ஓகே அங்கிள்"
மீண்டும் கொஞ்ச நேரம் அமைதியாய் நடந்தோம். தலை குனிந்த படியே இருந்தது. "என்ன பாத்தா முரட்டுக்காரன் மாதிரியா இருக்கு?" "இல்ல அங்கிள். பட் ஆரம்பத்துல கொஞ்சம் பயம்தான்"
"என் பொண்டாட்டிய நான்தான் கொன்னேன்னு சொல்றாங்க தெரியுமா?"
எனக்கு கொஞ்சம் தூக்கிப் போட்டது.
"என்ன சொல்றீங்க அங்கிள்"
"நீ சின்ன பையன். உனக்கு சொல்லியும் புரியாது. ஆனா, அவ என்னாலதான் செத்தான்னு சொல்றாங்க."
காரணத்தை அவர் சொல்லவில்லை. சொல்லியும் புரிந்திருக்காது.
"முயலுக்கு என்னாச்சு?"
"தெரில. இரவுதான் எடுத்திருக்கணும். என் புள்ளைங்க மாதிரி வளத்தேன். கொண்டு போனவன் நல்லா வாச்சுப்பானான்னு பயமா இருக்கு."

ஒரு கடையில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டார். "ரெண்டு டீ"என்றார். "குடிப்பேல்ல?" கேட்டார். "ஓகே அங்கிள்". கடைக்காரர் கொண்டு வந்து தந்தார். என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். ஏன் இவரோடு வந்திருக்கிறாய் என்பது போல இருந்தது. ஒரு மாதிரியாக இருந்தது. காசை குடுத்துவிட்டு வந்தார். நடந்தோம். "நீ டேவிட் ப்ரெண்டுல. அவன் வீட்டுக்கு எப்பவும் போவே. பார்த்திருக்கேன். திக் ப்ரெண்ட்ஸ்'ஓ?" "ஆமா. அஞ்சு வருஷமா பழக்கம். என் பெஸ்ட் ப்ரெண்ட்" என்றேன். "என் வைப் எனக்கு நாப்பது வருஷமா கூட இருந்தா. சின்ன வயசுல என் பக்கத்து வீடுதான். ஸ்கூல் விட்டா ரெண்டு பெரும் ஒண்ணாத்தான் விளையாடுவோம். அதெல்லாம் இன்பமான நாட்கள்" என்றார். எனக்குப் புரியவில்லை. அவரைப் பார்த்து சிரித்துவைத்தேன். விளங்கி இருக்க வேண்டும். ஒன்றும் பேசவில்லை. அவரது வீட்டை நெருங்கிய போது அப்பா என் சைக்கிள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். செபஸ்தியன் அங்கிளை கோபமாக பார்த்தார். என்னை பார்த்து "வா போலாம்" என்றார். செபஸ்தியன் ஒன்றும் சொல்லிடவில்லை. "போயிட்டு வாறேன்" என்றேன். சரி என்பது போல தலை ஆட்டி விட்டு வீட்டுக்குள் சென்றார்.

"லாஸ்ட் வீக் எனக்கு ட்ரான்ஸ்பர் கிடச்சிச்சு. இன்னிக்கு நைட் நாம வெளியூர் போறோம். இனிமே அங்கதான். உனக்கு புது ஸ்கூல் பாத்தாச்சு. மன்டே ஜாயின் பண்றே" அதிர்ச்சியாக இருந்தது. அங்கிளிடம் சொல்லிடலாம்னு பார்த்தேன். அப்பா முன் தைரியம் வரவில்லை. வீடு சென்று டேவிட்டுக்கு கால் பண்ணி சொன்னேன்.

நாட்கள் சென்றன. புது ஊர். புது அட்மாஸ்பியர். ரெட்ன்டு மாதங்கள் கழிந்தன. டேவிட் கால் எடுத்திருந்தான். பேசினேன். செபஸ்டியன் பற்றியும் கேட்டேன். அவர், நான் ஊர் வந்த அன்றே இறந்து விட்டதாக சொன்னான். ஒன்றுமே புரியவில்லை. நிஜமாகவே அழுகை வந்தது. இயற்கை மரணம்தான் என்றான். அவரது முயல்கள் அவரது வீட்டின் பின் பக்கத்திலேயே இறந்து கிடந்ததாகவும் சொன்னான். அவற்றை அங்கிள்தான் குத்தி இருந்தார் என்றான்.

"ஓகேடா நான் அப்புறம் பேசறேன்" போனை வைத்தான்.

மனது குழப்பத்தில் கனத்தது.