Friday 16 December 2011

ஓய்ந்து போன ஊஞ்சல்

ஊஞ்சலை ஆட்டிவிட்டால் கொஞ்ச நேரம் வேகமாக ஆடி, அதன் பின் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில், புவியீர்ப்பின் ஆர்முடுகலில் பிழைக்கத் தெரியாது ஓய்வுக்கு வரும். இடப்பட்ட நேரத்தில், யார் யாரோ வருவார், ஏறி அமர்வார். தம் விருப்பத்திற்கு ஏற்ப வேகமாய் ஆட்டுவார். விரும்பியவரை அருகில் ஏற்றிக் கொள்வார். முன்னோக்கியும், அகலவாக்கிலும் அமர்ந்து ஆடுவார். எது எப்படியோ யாரும் ஊஞ்சலில் நிரந்தரமில்லை. ஒரு கணத்தில் ஊஞ்சலும் நிரந்தரமில்லை. காலங்கள் வேகமாய் நகர என் கண் முன்னே நான் ஏறி, வேகமாய் ஆடி, அம்மாவைக் கூப்பிட்டு 'ப்ளைட் ஒட்டுகிறேன் பார்' என்று சொன்ன ஊஞ்சல் கழற்றப்பட்டு கொஞ்ச நாள் ஸ்டோர் ரூமில் போடப்பட்டு பின்பு பழைய சாமான்கள் வாங்கும் வியாபாரியால் ஒரு ட்ரெக்ட்டர்'இல் எடுத்துச் செல்லப்பட்டது.

சரியாக ஆறு நாட்கள் முன் ஒரு காலை வேளையில் செல்போன் அலறவும், எடுத்துப் பார்த்தேன். சி.எல்.ஐ. உம்மாவின் நம்பர் காட்டியது. பொதுவாக காலை நேரங்களில் உம்மாவிடம் இருந்து கோல் வந்தால் ஏதும் முக்கியமான செய்தியாகவே இருக்கும். ஆன்சர் செய்தேன்.

"மூத்தம்மாக்கு உடம்பு சரி இல்லை."

 [இங்கு மூத்தம்மா எனப்படுவது எனது கொள்ளுப்பாட்டியை. அதாவது பாட்டியின் அம்மாவை, அல்லது மூத்தம்மாவின் உம்மாவை. நான் எனது மூத்தம்மாவை/பாட்டியை 'மத்தம்மா' என்று அழைப்பதால் கொள்ளுப்பாட்டிக்கு 'மூத்தம்மா' என்ற உறவுப் பெயர் நிலைத்திருந்தது. இது போல இன்னும் குழப்பகரமான உறவுப் பெயர்கள் என் குடும்பத்தில் இருப்பதால் இதைப்பற்றி ஒரு விளக்கப் புத்தகம் எழுதலாம் என்றிருக்கிறேன்]

"ஏன்? என்னாச்சு?"
"திடீர் எண்டு சுகம் இல்லாம போச்சு."
"சரி நான் வரணுமா?"
"வந்தா நல்லம்தான். நான் பாத்துட்டு சொல்றன்"
"சரி"

வீட்டில் என்ன நடந்தாலும் உடனே சொல்லிவிடுவது உம்மாவின் வழக்கம்.

அன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமான உணர்வாக இருக்கவே மீண்டும் அடுத்த நாள் உம்மாவிட்கு கோல் போட்டேன். மூத்தம்மாவிட்கு சளி இருப்பதால் வருத்தம் அதிகமாக இருப்பதாகவும், சிலர் இது அவரது கடைசிக் கணங்களாக இருக்கக் கூடும் என்று சொல்வதாகவும், விஷயம் பரவி உறவுகள் பார்க்க வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். புறப்பட்டு வருவது நல்லம் என்றார்.

அடித்துப் புடித்து செவ்வாய் இரவு வந்து சேர்ந்தேன். வீடு வெறிச்சோடிப் போய் இருந்தது. காலை பதினோரு மணி வரை தூங்கினேன். எழும்பியதும் குளித்துவிட்டு மூத்தம்மாவை பார்க்கக் கிளம்பினேன். 'முக்சித்தின் பழைய வீடு' என்று எங்கள் நண்பர் வட்டத்தில் எல்லாராலும் அறியப்படும் அந்த வீட்டின் ஹோலில் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். உம்மா, சாச்சி, மத்தம்மா, முக்சிதின் உம்மா, தங்கச்சி எல்லோரும் சுற்றி இருந்தார்கள். போய் மத்தம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. வாயைத் திறந்த படி சுவாசித்துக் கொண்டிருந்தார். ஒரு காலை மடித்து வைத்திருந்ததால் முழங்கால் உயர்ந்து இருந்தது. கை ஒன்று நெஞ்சிலும் மாற்றியதை தலைக்கு அருகிலும் வைத்திருந்தார். சுவாசிக்க கஷ்டப்படுவது விளங்கியது.

சாச்சி அருகில் போய், "முத்தம்மா மூத்தம்மா" என்றார். கண்கள் மூட்டி இருக்கிறதா இல்லை திறந்து இருக்கிறதா என்று தெரியாத ஒரு கட்டத்தில் இமைகள் நிலைத்திருந்தன. மீண்டும் உம்மாவும் சாச்சியும் சேர்ந்து "மூத்தம்மா" என்று கூப்பிட்ட போது, "ஓய்" என்றார்.

காலச்சக்கரம் பின்னோக்கிப் போனது. தள்ளாடும் வயதிலும் கால்நடையாக தன் வம்சம் வழி வந்த குடும்பம் எல்லாவற்றின் வீட்டுக்கும் ஸடன் விசிட் அடித்த ஸ்ட்ரோங் மனுஷி. வஹி வருகிறதோ என்று சந்தேகம் வருமளவு டெக்னோலஜி மிகுந்த இந்தக் காலத்தில் செல்போன் எஸ்.எம்.எஸ் எதுவுமில்லாமல் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ரகசியம் இதுவரை ஒரு புரியாத புதிர். எனது தங்கச்சியின் மகனுடன் சேர்த்து தனது ஐந்தாவது தலைமுறையை பார்த்துவிட்ட ஜென்மம் அது.

"யாரு வந்திருக்கிற எண்டு விளங்குதா?" என்ற கேள்விக்கும் பதிலில்லை. "ஒய்" என்று சொன்னதில் உடம்பில் இருந்த சக்தி முழுதும் வடிந்து விட்டிருந்தது. சுவாசிக்க மட்டுமே ஏதுவாய் இருதயம் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். சாச்சி குடிக்கக் குடுப்பதற்காய் நெஸ்டமோல்ட் எடுத்து வந்தார். கண் முழித்திருந்த மூத்தம்மா மேலே சுழன்றுகொண்டிருந்த 'பேன்'ஐ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு 'ஐ ட்ரொப்பர்'இல் நெஸ்டமோல்ட்டை எடுத்து மூத்தம்மாவின் வாய்க்கருகில் கொண்டு போய், "மூத்தம்மா" என்று சத்தமாகக் கூப்பிட்ட போது, "ஒய்" என்றார். தருணம் பார்த்து 'ஐ ட்ரொப்பர்' வாய்க்குள் விடப்பட்டு நசிக்கப்பபட்டது. நெஸ்டமோல்ட் நாவில் வழிந்தோடி இருக்க வேண்டும். விளிமாங்காவை சுவைத்து வரும் உணர்வு போல் எதோ செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு பானம் ஏற்றப்பட்டது.

அவரது வாயை அவதானித்தேன். நாக்கு வறண்டு போய், கோடை காலத்தில் வெடித்துப் போன களிமண் தரை போல் இருந்தது. சுவை மொட்டுக்கள் முற்றாக அழிந்து விட்டிருக்க வேண்டும். உம்மாவிடம் காட்டினேன். கடைசி நாட்களில் சரியாக சாப்பிடவில்லை என்பதை சொன்னார். காது மடிந்திருப்பதையும் என்னிடம் காட்டினார்கள். 'ஸக்கர்தஹால்" நிலைமையில் இப்படி எல்லாம் ஏற்படும் என்று யாரோ அவர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். முழங்காலை அவ்வாறு மடித்து வைப்பதும், கால் விரல்களை தொடும் போது வேதனையாக இருப்பதும் அதில் ஒரு பகுதியாம். எல்லாம் மூத்தம்மாவிட்கு இருந்தது.

எழும்பி அருகில் போய் பார்த்தேன். தலையில் கை வைத்து, "மூத்தம்மா" என்றேன். பதிலில்லை. உம்மா சத்தமாக "முத்தம்மா" என்ற போது "ஒய்" என்றார்.
"வேற ஏதும் வேணுமா?"
அதற்கு பதில் சொல்வதைப் போல் வாயசைத்தார். அது, "ஒண்ணும் வாணா" என்று சொல்வதைப் போல் இருந்தது. குரல் வரவில்லை. நிராதியில்லை.
"யாரு வந்திருக்கா எண்டு பாருங்க."
பார்த்தார். பின் வேறு எங்கோ பார்த்தார். அவருக்கு ஞாபகங்கள் அழிந்து விற்றுக்க வேண்டும். அடையாளம் காணும் பகுதியில் என் போட்டோ பிரதியை கறையான் அரித்து விட்டிருக்க வேண்டும். அல்லது எல்லோருடைய போட்டோ பிரதிகளையும். ஆனாலும் குரல்களை அந்த மூளை வேறு எங்கோ சேமித்து வைத்திருக்க வேண்டும். உம்மா மற்றும் சாச்சி கேட்ட கேள்விகளுக்கு பரிச்சியமான குரல் போல் அவரது முகம் மறு மொழி கொடுக்க முனைவது விளங்கியது.

எங்கோ கை காட்டினார். ஏதோ சொல்ல வந்தார். பாதியிலேயே நின்று போனது அதற்கான முயற்சி. வாய் அகல விரித்து சுவாசித்தார். அது ஒன்றுதான் வாயால் தொடர்ந்து செய்ய முடிந்தது. தலையில் எதோ பட்டுக்கிடப்பதை பார்த்தேன். கையில் எடுத்துப் பார்த்தேன். சாச்சி, "பேன்" என்றார். கொஞ்ச நேரம் இருந்து விட்டு வீடு வந்தேன்.

மறுநாள் காலை, அதாவது நேற்று (15.12.2011 வியாழக்கிழமை), மூத்தம்மாவை பார்க்க தயாராகும் போது முக்சித்திடம் இருந்து கோல் வந்தது. ஆன்சர் பண்ணிய போது, "கெதியா வா. உடம்பு எல்லாம் சுருங்குதாம்"  என்றான். பதறிய படியே ஓடிப் போனேன். வீட்டு வாசலை நெருங்கிய போது அழும் குரல் காதில் கேட்டன.

உள்ளே சென்றேன். பார்த்தேன். அதே கட்டில். சுற்றி எல்லா பெண்களும் அழுத படி நின்று கொண்டிருந்தார்கள். காலில் பெருவிரல் இரண்டும் சேர்த்துக் கட்டுப் போடப் பட்டிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. தலையில் நாடியை சேர்த்து கட்டப்படும் துணி அவிழ்ந்து கொண்டிருந்தது. திறந்திருந்த வாயை நாடியில் கை வைத்து அமர்த்திய போது மூடவே, தலையில் முடிச்சுப் போட்டார்கள். சம்பவம் பரவவே சுற்று முற்றும் வரத் தொடங்கினார்கள். வழமையாக ஒரு மரண வீட்டில் நடக்கும் அம்சங்களும் நடந்தேறின. அவரை வைத்துக் கழுவுவதற்கான தட்டியை நானும் மாமாவும் எடுத்து வந்தோம். சாச்சா கையில் ஒரு பேப்பருடன் நின்றிருந்தார். "கொண்டு போய் பள்ளியில் அறிவிச்சிட்டு வாங்க" என்றார். வீட்டு எதிர் பள்ளி வந்து, முஅத்தினை எழுப்பி விஷயம் சொல்லி, மைக் முன் நின்று வாசிக்கத் தொடங்கினேன்...

"ஜனாஸா பற்றிய அறிவித்தல்"