Friday 12 March 2010

கே.எஃப்.சி தேடிய கதை / இங்கி பிங்கி பாங்கி கதை

நேற்று...
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டேன். இரவே மின்னிக்ஸும் வந்து தங்கியிருந்தான். அவனது நீண்ட நாளைய ஆசை "கீக் ரூல்ஸ்" கடையில் ஒரு 'டீ-சேர்ட்' வாங்கிவிடுவது. வாசகம் பொறித்த 'டீ-சேர்ட்' அணிவது நாகரிகம் ஆகிவிட்ட காலத்தில் அவனுக்கு அப்படி ஒரு ஆசை வந்தது ஒன்றும் தப்பில்லை எனினும் அப்பால நடக்கப் போற சம்பவங்கள் தெரியாத படியால் அன்றைய தினத்தை சிரித்த வண்ணமே ஆரம்பித்தேன். காலைக்கடன்கள் முடிந்து வெளியே வந்த போது மின்னிக்ஸும் எழுந்து விட்டிருந்தான். அவன் குளித்து எல்லாம் முடித்து வந்த போது நேரம் ஏழு இருக்கும்.

கடை திறந்திருக்கமாட்டாதபடியால் என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டரில் உலாவத் தொடங்கினோம். அப்புறம் இன்டர்நெட்டை வலம் வந்தோம் ஒருவாறு நேரம் 12 மணி ஆகிவிட்டிருந்தது. ஸாபித்தும் எம்முடன் வந்து இணைந்து கொண்டான். கடை இருப்பது இரண்டு ஊருக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தில் என்றாலும் அந்த ஊர் என்ன கலர் என்பது எங்களுக்கு 'கடல்லேயே' தெரியாது. அந்த ஊருக்கு என்ன நம்பர் பஸ்ஸில் போவது என்பதை நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட நாம், அந்த ஊரில் கே.எஃப்.சி எங்கிருக்கிறது என்பதை கேக்க மறந்தது எவ்வளவு பெரிய மிஸ்டேக் என்பது பட்ட பின்பே தெரிந்தது. காரணம் கே.எஃப்.சி இற்குப் பக்கத்திலேயே அந்தக் கடை இருக்கிறது என்று மின்னிக்ஸ் சொல்லி இருந்தான்.

இதில் நாங்கள் நினைவில் வைக்க மறந்த சில விஷயங்கள்:
1. ஒரு இடத்திற்குப் போவது எப்படி என்று எப்படி சிங்களத்தில் கேட்பது.
2. கடையின் கான்டாக்ட் நம்பர்.
3. நேரம்
4. காலநிலை

மழை கொட்டோ கொட்டென்று கொட்டுவது போல, சரி நேர் எதிர் கோட்டில் காய்ந்து தள்ளியது வெய்யில். ஒருவாறு பஸ்ஸில் தொற்றிக் கொண்டோம். நகர்ந்த பாடில்லை. ஸ்கூல் வேறு விடும் நேரமாதலால் செம ட்ராஃபிக் ஜாம். ஒரு மணித்தியால ஆமை வேகப் பயணத்தின் பின் டெஸ்டிநேஷனை சென்றடைந்தோம். நான் மற்றுமொரு முறை வியர்வைக் குளியல் எடுத்து விட்டிருந்தேன்.

ஒரு மேம்பாலம். சுற்றி "நை நை" என்று கத்திக் கொண்டிருக்கும் சிக்னல் லைட்ஸ். ஒரு விதமான ஸ்ட்ரேன்ஜ் அட்மாஸ்பிஃயரை தோற்றுவித்திருந்தன. அது நான்கு தெருக்கள் வந்து முட்டும் ஒரு சந்தி. நான் 'இங்கி பிங்கி பாங்கி' போட்டு ஒரு தெருவை தெரிவு செய்தேன். "மச்சான், இந்த ரோட்ல முதல் ட்ரை பண்ணலாம் வாங்க" என்றபடி நடக்க ஆரம்பித்தேன். "முதல்ல யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான் ஸாபித். "அது சரி, மொழி தெரிஞ்சா ஏன் கேக்காம, தெரியாததனால தானே இப்பிடி ட்ரை பண்றோம். பேசாம வாங்க" என்றபடி நடந்தேன். மின்னிக்ஸும் எனது கருத்தை ஏற்றுக் கொண்டான். ஸ்கூல் விட்டு அழகான கேள்ஸ் மற்றும் பாய்ஸ் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூல்ல கொடுக்கற  அட்மிஷன் பாஃர்ம்ல முதலாவது கண்டிஷனே "உங்க பொண்ணு அழகானவளா இருக்கணும்னு தான் இருந்திருக்கும் போல" என்றான் மின்னிக்ஸ். சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேவதை மாதிரி ஒருத்தி எங்களைப் பார்த்து சிரித்தபடியே கடந்து சென்றாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்துவிட்டிருந்தோம்.

"போடாங் நீயும் உன் இங்கி பிக்கியும்" என்று நொந்து கொண்ட ஸாபித் மறுபடியும் "யாரையாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான். வேறு வழி இல்லாமல் சரி என்ற நான், யார் போவது என்று கேட்ட போது, எங்களுக்குள் மறுபடியும் இங்கி பிங்கி பாங்கி போட வேண்டிய நிலை வந்தது. போட்ட போது ஆப்பு வந்தது எனக்கு. என்ன செய்வது என்று நொந்த படி நடந்த போது எதிர்ப்பட்டார் ஒரு காலேஜ் வாட்ச்மேன். ஒருவாறு மனசுக்குள் பலமுறை ப்ராக்டிஸ் செய்து கொண்டு அவரிடம் போனேன். உற்றுப் பார்த்தார்,
"கே.எப்.சி?" என்றேன்.
"ஆ?"
 "கே.எப்.சி, கே.எப்.சி..."
 "ஆ?"
எனக்கு  பற்றிக் கொண்டு வந்தது. நன்றாக ஏசி விடத் தோன்றியது. அதற்கும் அவர் மொழி தெரிய வேண்டுமே. தெரிந்திருந்தால் அதை ஏசுவதற்கா யூஸ் பண்ணியிருப்பேன். வழியைத் தெரிந்து கொண்டிருப்போமே. ஒன்றுமே சொல்லாமல் திரும்பி வந்தேன்.

மின்னிக்ஸும் ஸாபித்தும் முறைத்தார்கள். நாங்கள் பார்பிகியூ ரேஞ்சுக்கு நன்றாகவே கறுத்து விட்டிருந்தோம். அப்போதுதான் எனக்கு பெரோஸ் இன் ஞாபகம் வந்தது. மொபைலில் அழைத்தேன், மேட்டரை சொன்னேன். "எனக்கும் அந்த ஏரியா தெரியாது மச்சான்...", நாசமாப் போச்சு "... கொஞ்சம் வெயிட், பக்கத்துல கேட்டு சொல்றேன்". மீன்வைல் நாங்கள் எங்கள் மதிய உணவாக "7 UP" சாப்பிட்டு... ஸாரி, குடித்துக் கொண்டோம். மறுபடியும் அழைத்தேன். "நீ போற திசை சரிதான் மாம்ஸ். அப்டியே போய்க்கிட்டு இருந்தீன்னா ஒரு "புட் சிட்டி" சுப்பர் மார்க்கத் வரும். அதுக்குப் பக்கத்திலேயேதான் 'கே.எப்.சி' இருக்கு". "ஓகே டா, நான் பார்த்துக்கறேன்". மணி 2.30 ஐக் காட்டியது.

நடக்கத் தொடங்கினோம். அது சன நெரிசல் மிகுந்த நகரம். நாங்கள் நடந்த ரோட்டில்சன நெரிசலும், கட்டடங்களும் குறைந்து கொண்டே வருவதாக உள்ளுணர்வு எங்கள் மூணு பேருக்கும் கடுதாசி போட்டிருந்தார். அது டெலிவரி ஆக எடுத்த நேரத்தில் நாங்கள் 2 கிலோ மீட்டர் நடந்து விட்டிருந்தோம். உள்ளுணர்வின் எச்சரிக்கை கிடைக்கப் பெற்றதும் நின்று சுற்று முற்றும் பார்த்த போது பச்சைப் பசேல் என வயல்கள் எதிர்ப்பட்டன. "யார்ட்டயாவது கேட்டுப் பார்ப்போம்டா" மறுபடியும் ஸாபித்.

மின்னிக்ஸ் வானத்தைப் பார்த்த படி நின்றான். பின் எங்களைப் பார்த்தான். "வெயிட், என்கிட்ட அந்த ஷாப் நம்பர் இருக்கு, டயல் பண்ணிக் கேப்போம்" னு அவன் சொன்ன மாதிரி விளங்கவே "என்ன சொன்னாய்? நம்பர் இருக்கா?" என்று கேட்டோம். "ஆமா"ன்னான். "அடப்பாவி, இத முன்னாடியே செஞ்சிருக்கப்படாதா? நாறப் பயலே" பொரிந்து தள்ளினான் ஸாபித். நான் தலைவிதியை நினைத்துக் கொண்டு அருகிலிருந்த கடை ஷோ கேஸில் முகத்தைப் பார்த்த போது நன்றே கறுத்துவிட்டதை உணர்ந்தேன்.

மின்னிக்ஸின் தொலைபேசி அழைப்பு ஆன்ஸர் செய்யப்பட்டது. மேட்டரை சொன்னான். "சாரி சார், நாங்க இப்போ ஸ்டோர் இல்லை. ஆன்லைன் சேல்ஸ் மட்டும்தான் பண்றோம்" என்று வந்திச்சு பதில். செம கடுப்பாயிடிச்சு எங்களுக்கு.

"ஒண்ணும் வேணாம். பேசாம "பெட்டாஹ் (கொழும்பின் ஒரு ஏரியா)" போய் ஏதாவது சாப்பிடுவோம்." என்றான் மின்னிக்ஸ். சரி என்று பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். அது நாங்கள் வந்த பாதை வழியே ஓடத் தொடங்கியது. மேம்பாலம் வந்தது. கடந்து நேராகச் சென்றது. நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தெரிவு செய்த பாதைக்கு நேர் எதிர்ப் பாதை அது. சந்தியிலிருந்து ஒரு ஐம்பது அடி தூரம் சென்றிருப்போம் "கே.எப்.சி" என்றொரு போர்டு எங்களைப் பார்த்து கண்சிமிட்டியது.

ஸாபித்தும், மின்னிக்ஸும் என்னைப் பார்த்து முறைத்தார்கள்.

இனி "இங்கி பிங்கி பாங்கி" போடுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டேன்.