Wednesday 24 March 2010

இது மற்றுமொரு முத்தமில்லை

என் உதடுகள் இன்னும் காய்ந்து விடவில்லை. அவை காய்வதில் எனக்குத் துளியளவும் விருப்பமில்லை. உன் இதழ் ரேகைகள் உருவாக்கிய குளிர்ச்சி என்னை சிலிர்க்க வைத்தது.

அது வெறும் எச்சில் மட்டுமல்ல, உன் நாணம், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கொஞ்சப் பயம், உன் அன்பு மற்றும் உன் அழகு எனப் பல விஷயங்கள் உணர்ந்தேன்.



நீ போன இடங்களுக்கு எல்லாம் நானும் அலைந்து வந்திடவில்லை, இருந்தாலும் உன்னைப் பல இடங்களில் கண்டதாகவே உணர்கிறேன் இந்த முத்தத்தின் பின். வயாகராவை விட மோசமானது ஒரு பெண்ணின் காதல் முத்தம். அதை உன்னிடம் பெற்ற பின் மற்றவர்களின் முத்தம் ஒரு பொருட்டற்றுப் போகிறது.


 உன் உதடு மட்டும் பதித்தாய், எனக்குப் பூர்வ ஜென்மம் வரை 'டைம் மெஷின்' இல் சென்று வந்த உணர்வு. அதுவும் அந்தச் சில செக்கன்களுக்குள்ளாகவே. புயல் மழையில் பல நூறு வருஷம் நின்றதைப் போன்று நனைந்து விட்டிருந்தேன் உள்ளுக்குள்ளாக. நாடி நரம்பிலிருந்த ரத்தம் எல்லாம் உறிஞ்சி எடுத்து விட்ட ஒரு ரத்தக் காட்டேரி நீ. பதிலுக்கு காதல் எனும் அற்புத மருந்து புகுத்திவிட்டாய்.


அதெப்படி, டாக்டர் படிப்பு படிக்காமலே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாய்? அதுவும் வெறும் இதழ்களை பதித்து. இப்போதெல்லாம் இரண்டு நாடித்துடிப்பை உணர்கிறேன் நான். யாராவது செக் பண்ணிவிட்டு "எத்தனை மாசம்" மற்றும் "எப்போ பொம்பளையா மாறினே" என்று சந்தேகத்தோடு கேட்காமல் இருந்தால் சரி. சும்மா சொல்லக் கூடாது, மன்மதக் கலை பெண்களின் உதடுகளில்தான் ஆரம்பிக்கிறது. எனக்கு உன் இதழில்.


நானும் பல பேரிடத்தில் முத்தம் பெற்றிருக்கிறேன். ஆனால் எல்லாமே உன் போல் இனிக்கவில்லை. அது உன் உதடு என்பதாலா அல்லது தந்தது என் உதட்டில் என்பதாலா? அப்படி என்னதான் இருக்கிறதோ அதனுள்...

இப்போதெல்லாம் அம்மாக்கு  சந்தேகம். நான் தண்ணி அடிக்கிறேனோ என்று. உன் முத்தம் தந்த போதை இன்னும் தெளியவில்லை. இதை குணப்படுத்த ஒரு வழி சொல்லேன். என்ன செய்வது அதிலிருந்து தெளியவும் மனமில்லை.


எது எப்படி இருந்தாலும்... நான் எழுதித் தருகிறேன்...


"இது மற்றுமொரு முத்தமில்லை"