Saturday 20 March 2010

கவிதையும் காதலும்

கவிதை எழுதுவது அப்படி ஒன்றும்
கம்ப சூத்திரமாய்ப் படவில்லை
உன்னைப்  பார்த்த பின்
என்றெல்லாம் பொய் சொல்லத்தெரியவில்லை.

சுமாரா எழுதிக் கொண்டிருந்ததும்
சப்பென்று போய் விட்டது
என்று பக்கத்து வீட்டுப் பாட்டி
வெற்றிலை போட்டபடி சொன்னார்.


அவருக்கும் கோபம் இப்போது.
அவரை  அழகுராணி என்றெல்லாம்
எழுதிய என் கை இப்போது
உன்னை வர்ணிக்கத் தொடங்கியதில்.

பெண்களுக்கு தமக்குப் பிடித்தவன்
விஷயத்தில் பொறாமை வருவது
வாஸ்தவம்தான் எனினும்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

இப்போது நான் கேட்பதெல்லாம்
எனக்கு ஒரு நல்ல முடிவு.
பிடிக்காவிட்டால்  இப்போதே சொல்லிவிடு,
பாட்டி எனக்காக காத்திருக்கிறாள்.