Thursday, 25 March 2010

தலைக்கு மேல் வந்த வினை

அது ஒரு இதமான இரவு வேளையின் பின் பகுதி. விடியறதுக்கு ஒரு 3 மணி நேரமே இருந்தது. அப்போ மணி 2.30 இருந்திருக்கணும். சுத்தி வர சிட்டுவேஷன் எப்பிடி இருக்குன்னு அறவே தெரியாத லெவல்ல, இன்னும் தொடர்ந்து ஒரு 5 நிமிஷம் குறட்டை விட்டிருந்தேன்னா பக்கத்து வீட்டுக்காரன் என் பெட்ரூம் சுவர்ல தட்டி "யோவ் அந்த மாவு அரைக்கற மிஷினை அர்த்த ராத்ரில ஆன் பண்ணி அப்டி என்னய்யா சரித்திரம் படைக்கறே, அதை அணைச்சுத் தொலையும்" என்று கத்தும் நிலைமைல தூங்கிக்கிட்டு இருந்தேன். 

அப்பிடி ஒரு கவிதையே உருவான இரவு வேளையில் ஏதோ ஒன்று குறைவது போல் லைட்டா ஒரு பீலிங் வரவே கண் முழித்துக் கொண்டது. "இன்னா பீலிங்கு, ஆல் பிகாஸ் ஒப் மீ" னு என்னைப் பார்த்துப் பல் இளித்தது தலைக்கு மேல் இருந்து 'சீலிங் பேன்'. என்ன அதிரி புதிரி பண்ணிச்சோ தெரியல்ல டொட்டோடோய்ங்னு நின்னு விட்டிருந்தது அது. "ஆகா சேம் பிளாட்" என்ற படியே உடம்பு முழுவதும் மொய்த்திருந்தன நுளம்பு/கொசு எனப்படும் மாஸ்கிட்டோஸ். காய்ல், ஆய்ல், நுளம்புவலை மற்றும் இன்ன பிற பாதுகாப்பான்கள் வந்துவிட்டிருந்த போதிலும் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் பிடிக்காத காரணங்களால் நான் அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து வந்தேன். இந்தப் பழக்கமே என் தூக்கத்திற்கு வச்சது ஒரு பெரிய ஆப்பு. 

"சாரி சார், இனிமே எங்க கைல ஒன்னும் இல்ல, எதையுமே ஒரு மூணு மணிநேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்" என்று தலைக்குள் இருந்து சத்தம் போட்டார் மிஸ்டர் பிரெய்ன். இனியும் யோசிச்சு பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், சரி படுத்துத்தான் பார்ப்போமே என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திய போதுதான் ஞாபகம் வந்தது நம்ம ராகவன் முகம்.
 "நண்பா! நான் இருக்கேன்டா, நீ ஒண்ணப் பத்தியும் கவலைப் படாதே, எல்லாத்துக்கும் ஒரு சால்யூஷன் இருக்குப்பா" என்ற படியே காற்றில் கரைந்து போனது அவன் முகம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவன் ஒரு பிரபல யுனிவர்சிட்டி ஒன்றில். இப்போதுதான் இரண்டாமாண்டு. பக்கத்து வீட்டுக்காரன். பால்ய நண்பன். புத்தகப் புழு. த்ரீ இடியட்சில் வரும் சைலன்சர் கணக்காய் ஒரு கேரக்டர். ஆனா கொஞ்சம் நல்லவன் மற்றும் அப்பாவி. ஹெல்ப் மைன்டட் பெர்ஸன்.   

அடுத்த நிமிடம் அவன் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். அவன் தனியாத்தான் இருக்கான் என்று ஆல்ரெடி தெரியும். பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். "ராகவா... ராகவா..." டொக்.. டொக்..டொக்.. கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தான் அவன். "என்ன மச்சான் இந்த நேரத்துல?". விவரித்தேன். நாடியில் கை வைத்து என் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் அவன் என் பிரச்சினையைக் கேட்ட விதம் அவன் எதிர்காலத்தில் ஒரு ப்ராபஸர் ஆக வருவான் போல என்று எண்ணச் செய்தது. "அடச் சே, சப்ப மேட்டர் மாம்ஸ். நீ இரி. ஜஸ்ட் டூ மினிட்ஸ், டூல்ஸ் எடுத்துட்டு வாரேன். தெர்ட்டி மினிட்ஸ்ல செஞ்சிடலாம்".  "ஓகேடா, அப்போ நான் வீட்ல இருக்கேன், நீ வா". "ஷ்யூர் டா" நேரம் மணி 3.


நான் போய் சரியாக ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தான் அவன். ஒரு கையில் தலையணை சைஸ் புத்தகம் ஒன்று, மற்றையதில் ஒரு டூல் பாக்ஸ். ரூமுக்குள் போனோம். சுவிட்ச் போட்டுப் பார்த்தான். கதிரை போட்டு ஏறி 'டெஸ்டர்' வைச்சுப் பார்த்தான். "ஓகே மச்சான் லெட்ஸ் கெட் திஸ் டன். ட்ரான்ஸ்போர்மர்தான் அப்சட். நான் இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணி செய்யறேன். நாளைக்கு நீ புதுசு வாங்கி வா நான் பிக்ஸ் பண்ணித் தாரேன்". "ஓகேடா, இப்போ நான் நிம்மதியா தூங்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு முதல்ல". "டோன்ட் வொர்ரி, நான் இப்படியான மேட்டர்ஸ் பத்தித்தான் படிக்கேன். செஞ்சுடலாம்". "ஓகே"

பேனை கழட்டினான். துடைச்சான். ஒவ்வொரு பார்ட்ஸாய் வெளியில் எடுத்தான். அதன் பெயர்களை சொல்லிக் காட்டினான். புக்கை பார்த்து ஒவ்வொன்றும் எதுக்காக வைக்கப் பட்டிருக்கின்றன, என்ன வேலையைச் செய்கின்றன என்று லெக்சர் எடுத்தான். மறுபடியும் புக்கை ரிஃபர் பண்ணி ட்ரான்ஸ்போர்மர் என்று அவன் சொன்னதை என்னமோ பண்ணினான். மறுபடியும் பழையபடி பிக்ஸ் பண்ணினான். ஒரு வெற்றிகரமான புன்னகை அவன் முகத்தில் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் இருந்தது. "இதுதானா உன் தர்ட்டி மினிட்ஸ்?" மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
"ஓகே மாம்ஸ், இப்போ ட்ரையல் பார்க்கலாம்" வெற்றிக் களிப்பில் சொன்னான் அவன். என்னமோ இவன்தான் பேனையே கண்டுபிடிச்சி இப்போ ட்ரையல் பார்க்கப் போற மாதிரி.
வேற வழின்னு நினைத்துக் கொண்டு சுவிட்சை போட்டேன். 


வழமையாக அன்டி-கிளாக்வைஸ் (anti-clockwise, இடமிருந்து வலம்) ஆக சுற்றும் பேன், கிளாக்-வைஸாக (clockwise, வலமிருந்து இடம்) சுற்ற ஆரம்பித்தது.

"இன்னாடா நடக்குது இங்க?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தேன்.


அவன் அதே கேள்வியுடன் பேனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


பேன் எங்கள் ரெண்டு பேரையும் பார்த்து "விடுகதையா இந்த வாழ்க்கை..." என்று பாடுவது போலவே தோன்றிட்டு...