Sunday 21 March 2010

நீயும் நானும்

கண் விழித்த போது தெம்பில்லை
கனக்கும் மனதில் உயிரில்லை.
நானும் மற்றுமொரு ஜடம்
முழுக்க மரத்துப் போய்...


குட்மார்னிங் சொல்லிக் குட்டும்
உன் குறும்பான கைகளின்
வளையல் சத்தம் இல்லை.
அறையெங்கும் ஒரு நிசப்தம்...

பெட் காப்பி தரும் கப்
எறும்புகளின் இருப்பிடமாய் இருக்கிறது.
கட்டில் ஓரத்தில் இருந்து
என்னை வெறித்துப் பார்க்கிறது.

வழக்கமாய் கட்டிலில் படரும்
ஜன்னல் வழி சூரிய வெளிச்சம்
உள்ளே வர முடியவில்லை,
ஜன்னல்  திறக்க நாதியில்லை.

களை இழந்த வீட்டில்
கூனிக் குறுகி ஒரு மூலையில்
செய்வதறியாது விக்கித்து நிக்கிறேன்
ஆறுதல் சொல்ல நீ இல்லை.

நேற்றுக் காலை இதெல்லாம் செய்ய
நீ இருந்தாய் என் துணையாக.
பின்னேரமே விபத்தில் இறந்த நீ
என்னையும் கொன்று விட்டாய்.

வீட்டார் எதிர்க்க நண்பர் துணை நிக்க
வாழ்க்கை ஆரம்பித்து முப்பது வருஷம்.
குழந்தையில்லை என்ற குறை போக்க
ஒருவர் மற்றவர் குழந்தையானோம்.

கவலை என்பதை மறக்கவைத்தாய்
அகராதியில் அழித்தெறிந்தாய்
உன்னுடன் வாழப்பழகிய எனக்கு
நீயில்லாமல் இருக்கத் தெரியலியே.

எல்லாமாகி என்னுடன் இருந்தாய்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
போவாய் என்றேன் சொல்ல மறந்தாய்?
நான் செத்திடுவேன் என்று பயமா?


இப்போதும் என்ன?
செத்துத்தான் விட்டேன்.
நிற்கிறேன் அழத் தெரியாமல்
உன் போட்டோவை வெறித்தபடி...